பாலக்காட்டுப்பயண(ம்)ங்கள்.
பிரசன்னம் பார்த்து
எங்கள் குலதெய்வம் ‘மீன் குளத்தி அம்மன் என்று தெரிந்ததும் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். கட்டுரை எழுதிவைத்து அதை பதிவு போடுமுன் மீண்டும்
ஒரு முறை பாலக்காட்டுக்கு பயணம் செய்தோம்.
இரண்டாவது முறை என் மாமியாரையும் அழைத்துக்கொண்டு சென்றோம். இரண்டுக்கும் சேர்த்து இந்தப் பதிவினை பதிகிறேன். (இப்ப இன்னும் இரண்டு தரம் சென்றாகி விட்டது).
முதல் முறை 26
நவம்பர், 2015 வியாழக்கிழமை காலை சதாப்தி விரைவு ரயிலில் நானும், என் கணவரும் கோவை
சென்றோம்.
காலை 0715க்கு
சென்னையிலிருந்து புறப்பட்டது சென்னை – கோவை சதாப்தி ரயில். ரயில் கிளம்பியவுடன் இரண்டு மாரி பிஸ்கட்டுகள்,
ஒரு சிறிய சர்க்கரை பொட்டலம், ஒரு சிறிய பால்பவுடர் பொட்டலம், ஒரு தேயிலை பொட்டலம். அப்புறம் சுடச்சுட ஒரு காகித கோப்பையில் தண்ணீர்.
பிறகு 0800 மணிக்கு
இரண்டு துண்டு ரொட்டிகள், வெண்ணை, ஒரு KETCH UP SACHE, ஒரு கரண்டி ரவா உப்புமா, ஒரு
வடை, சாம்பார், சட்னி.
0930 மணிக்கு மாம்பழ
ஜூஸ்.
1130 மணிக்கு தக்காளி
சூப், SOUP STICK, சிறிய பொட்டலம் உப்பு மற்றும் மிளகுத் தூள்.
மதியம் ஒருமணிக்கு இரண்டு சப்பாத்தி, பனீர் மசாலா, பருப்பு, சாதம், தயிர், ஐஸ்கிரீம்.
இந்த எல்லா ஐட்டம்களிலும்
நன்றாக இருந்தது ஐஸ்கிரீம், ஜூஸ், தயிர் தான்.
ஏற்கனவே ஹோட்டல்களில்
சாப்பிடுபவர்களுக்கு இவைகள் அமிர்தமாகக் கூட இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற நாக்கு நீண்ட தேவதைகளுக்கு,
வீட்டு சாப்பாட்டிற்கு அடிமையாகிப் போனவர்களுக்கு ……………… ரொம்ப சுமார் ரகம்தான்.
ரயிலில் செல்லும்
போது சும்மா ஒரே இடத்தில்தான் உட்கார்ந்து இருக்கப் போகிறோம். அதனால இவ்வளவு ஐட்டம் எதற்கு. பசிக்கும் முன் புசிக்கக் கொடுத்து விடுகிறார்கள். நன்னா பசிச்சு
ஏதோ கிடைச்சா சரின்னு இருந்தாலாவது ருசி தெரியாது. ஐட்டம்களை குறைத்து நல்ல சுவையா கொடுக்கக்கூடாதோ?
ஹோட்டல்களிலும்
கூட நிறைய பேர் பொரியல் போன்றவற்றை சுவை இல்லாததால் சாப்பிடாமல் அப்படியே வைத்துவிட்டுப்
போய் விடுகிறார்கள். எனக்கு இந்த ஒரு விஷயம்
மட்டும் புரியவே இல்லை. இவர்கள் ஏன் சுவையைக்கூட்டி
அளவைக் குறைக்கக்கூடாது.
மதியம் ரெண்டேகால்
மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடைந்தோம்.
கோவை ரயில் நிலையத்தில்
இருந்து 2 கி.மீ தொலைவில் இருந்த உக்கடம் பேருந்து நிலையத்திற்கு 80 ரூபாய் கேட்டார்
ஒரு ஆட்டோக்காரர். ஓ இதுதான் பகல் கொள்ளையோ என்று நினைத்து 4,5 ஆட்டோக்களைத்
தவிர்த்தபின் ஒருவர் 50 ரூபாய்க்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றார். இதை ஏன் சொல்கிறேன் என்று படிக்கப் படிக்கப் புரிந்து
கொள்வீர்கள்.
உக்கடம் பேருந்து
நிலையத்தில் இருந்து பாலக்காடு பேருந்து நிலையத்திற்கு ஒருவருக்கு பேருந்து கட்டணம்
ரூபாய் 40.
பாலக்காடு பேருந்து
நிலையத்தில் இருந்து நாங்கள் தங்கவேண்டிய இடத்திற்கு ஆட்டோ கட்டணம் 30 ரூபாய். அங்கு சென்றுவிட்டு அங்கிருந்து கல்பாத்தி சிவன்
கோவிலுக்குச் சென்றோம். அதற்கு ஆட்டோ கட்டணம் 50 ரூபாய். அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், ‘நாங்கள் இந்த சிவன் கோவிலுக்குச்
சென்று விட்டு வேறு இரண்டொரு கோவில்களுக்குப் போக வேண்டும். நீங்கள் சிறிது நேரம் காத்திருந்து எங்களை மற்ற
கோவில்களுக்கு அழைத்துச் சென்று விட்டு நாங்கள் தங்கும் இடத்தில் விட்டுச் செல்ல முடியுமா?”
என்று கேட்டோம். அவர், எல்லா இடங்களிலும் சுலபமாக
ஆட்டோ கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அருகில் இருக்கும் இரண்டொரு கோவில்களின் பெயர்களையும்
சொல்லிவிட்டுச் சென்று விட்டார். அவர் நினைத்திருந்தால்
எங்களை எல்லா கோவில்களுக்கும் அழைத்துச் சென்றுவிட்டு எங்களிடம் அதிகமாக பணம் வாங்கிக்கொண்டிருக்கலாம்.
அங்கு ஒரு விநாயகர்
கோவில், கல்பாத்தி சிவன் கோவில் மற்றும் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து
வடக்கந்தாரா அம்மன் கோவிலுக்குச் சென்றோம்.
கல்பாத்தியில் இருந்து வடக்கந்தாரா அம்மன் கோவிலுக்கு ஆட்டோ கட்டணம் 30 ரூபாய். அங்கிருந்து கபிலவஸ்து ஹோட்டலுக்குச் சென்றோம். இதற்கும் ஆட்டோ கட்டணம் 30 ரூபாய். சாப்பிட்டுவிட்டு நாங்கள் தங்கி இருந்த இடத்திற்குச்
சென்றோம். பக்கத்தில்தான் இருக்கிறது என்று
இன்னொரு ஆட்டோ ஓட்டுனர் எங்களிடம் வாங்கிக் கொண்டது 20 ரூபாய். இதே தூரம் உள்ள இடங்களுக்கு நம்ப ஊரில் சென்றிருந்தால்……………… நினைத்துப் பாருங்கள்.
மறுநாள் காலை மீன்
குளத்தி அம்மன் கோவிலுக்குச் செல்ல நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து பேருந்து
நிறுத்தத்திற்கு 20 ரூபாய் கொடுத்தோம் ஆட்டோ ஓட்டுனருக்கு. ஆச்சரியம் ஆனால் உண்மை. அல்லவா?
இதற்குப்பிறகு இரண்டு முறை பாலக்காட்டிற்கு பயணித்தாகி விட்டது. ஆனால் பயணக் கட்டுரைகளை எழுதத்தான் நேரம் இல்லை. என் சோகக் கதையைக் கேளு வலைக்குலமே.....................
BETTER LATE THAN NEVER என்ற பழமொழியெல்லாம் என்னை மாதிரி ஆட்களுக்காகவே எழுதியதுதானோ?