Sunday, May 14, 2017


தாய்மை

நாங்கள் ஊட்டிக்குச் சென்ற போது, பைக்காரா சென்று விட்டு ஊட்டிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். வழியில் ஒரு இடத்தில் இறங்கி குரங்குகளுக்கு வேர்க்கடலையும், கேரட்டும் வாங்கிப் போட்டோம்.  கடலை விற்ற பெண்மணியின் மகன் அப்பொழுது அங்கு வந்தவர் எங்களிடம், ”அதோ அங்கே உட்கார்ந்திருக்கும் குரங்குக்கு போடுங்க.  அது மூணு நாளா செத்த குட்டியை துக்கிக்கிட்டு அலையுது.  நாங்களும் மூணு நாளா அத எப்படியாவது வாங்கி புதைக்கணும்ன்னு நினைக்கிறோம், முடியவே இல்லை”என்றார்.  நாங்கள் அசந்து விட்டோம்.   பிறகு அந்தக்குரங்கு செத்த குட்டியையும் தூக்கிக் கொண்டு ரோடிற்கு வந்தது.  அதன் முகத்தில் சொல்லொணா துயரம்.  மேலும் அவர் சொன்னது, “அந்தத் தாய்க் குரங்கு, குட்டிக்குரங்கு இறந்த உடன் அதன் வாயில் தன் வாயை வைத்து ஊதியதாம்”.   ஒரு வேளை குட்டிக்கு உயிர் வந்து விடும் என்று ஊதி இருக்குமோ?
அந்தக் குரங்கின் தாய்மை உணர்வைக்கண்டு வியந்துதான் போனோம்.








மீள் பதிவு

Saturday, May 13, 2017





அன்னையர் தின வாழ்த்துக்கள்.








தானே வந்து

தரணியெங்கும்

தாங்க முடியாதென்று

தாயைப் படைத்தான்

தாயுமானவன்

தாயவள் பங்கு

தினந்தோறும் இருந்தாலும்

தனியாக ஒரு நாளாவது

தட்டாமல் கொண்டாடுவோம்

தாயைப் போற்றுவோம்

தாய்மையைப் போற்றுவோம்

தட்டாமல் போற்றுவோம்

தப்பாமல் போற்றுவோம்



மீள் பதிவு

Wednesday, May 3, 2017

 பிள்ளையில்லா வீடு


சிறு பிள்ளையில்லா வீடு
வைத்தது வைத்த இடத்தில்

கொட்டிக் கவிழ்க்க ஒரு சுட்டி இல்லை

இட்ட கோலத்தை அழிக்க

ஒரு பிஞ்சுப் பாதம் இல்லை

இரு கை கொண்டு அள்ளி

சோற்றை வாரி இறைக்கவும் ஆளில்லை.

காது குளிர ம்மா, ப்பா,

தாத்தா, பாத்தி என்று
அழைக்கும் மழலைச் சொல்
கேட்கவே இல்லை.

ஆனால், எந்நேரமும் 

முழுச் சுத்தமாக
இருக்கும் வீடு 
எனக்கு தேவையே இல்லை.

இப்படி கலைந்த கோலமும், 

சின்னச் சின்ன சேட்டைகள் செய்யும்
பிள்ளைகள் இருக்கும் வீடுதான் 
என் விருப்பம்.

***
நேற்று மாலை மருமகள் போட்ட கண்ணன் காலடிகளை பேத்தி பூஜை முடிந்த சிறிது நேரத்திலே அழித்து விட்டாள். அப்பொழுது என் மகன் கேட்டான், “அம்மா! சில வருடங்களுக்கு முன் நம் வீட்டில் கண்ணன் பாதங்கள் எவ்வளவு நாட்கள் அழியாமல் இருக்கும்” என்று.
அப்பொழுது தோன்றியது இது.

மீள் பதிவு



சின்னச் சின்ன கோலங்கள் 1







 










Tuesday, May 2, 2017

வீடு

IN AND OUT CHENNAI JAN 16-31 ல் வெளி வந்த என் கவிதை ‘வீடு’.  உங்களுக்காக மீண்டும் இங்கு பதிகிறேன்

வீடு
வாசலிலே நிதம் பூத்து
இதமான மணம் பரப்பும்
நித்ய மல்லிக்கொடி,
வீட்டைச் சுற்றி மணம் நிறைந்த
நிறம் மிகுந்த மலர்ச் செடிகள்,
விசாலமான அறைகள்,
வீடு நிறைய மனிதர்கள்,
தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா,
சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று,
கருவண்டு கண்கள் சுழற்றி
நொடிக்கொரு சேட்டை செய்யும்
குஞ்சு குளுவான்கள்,
புது மனிதர் வருகையை
கட்டியம் கூறும்
பைரவர் வாசலிலே,
கொல்லையிலே கல்கண்டுத் தண்ணீருடன்
எப்போதும் வற்றாத கிணறு,
மா, பலா, வாழை மரங்கள்,
தினத் தேவை பூர்த்தி செய்யும்
காய்கறிச் செடிகள்,
இப்படி என் பிறந்த வீடு போலவே
புகுந்த வீடும் இருக்கும்
என்ற கனவுகளுடன்
கை பிடித்த மணாளனுடன்
மகிழுந்திலிருந்து வலது கால் எடுத்து
நிலம் பதித்து புது வீடு
வந்து சேர்ந்தேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல
எண்ணிலா புறாக்கூண்டுகள்
விருந்தினர் வருகையை
சூசகமாகத் தடுப்பது போல்  
ஒற்றைப் படுக்கையறை,
பக்கத்து வீட்டில் இருப்பது
யார் என்று தெரியவே
பல நாட்களாயிற்று.
வாசலில் வந்து பார்த்தாலும்,
சாளரத்தின் வழியே பார்த்தாலும்
கண்ணில் பட்டது சாத்திய கதவுகளே!
காய்கறி வண்டிக்காரன்,
விற்பனையாளன்,
அறிமுகம் இல்லாதவர்
அனைவருமே நிறுத்தப்பட்டனர்
வெளி வாசலிலேயே
பாதுகாப்பான இடம்
தண்ணீர் வசதி
எப்பொழுதும் மின்சாரம்
அன்பான கணவன்
இல்லை என்ற சொல்லுக்கே
இடமில்லாத ஒரு வாழ்க்கை
ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
‘அடியே! நீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளி’ என்று.

Monday, May 1, 2017



குல தெய்வம்


என்னடா இவ, குலதெய்வம்ன்னு தலைப்பை போட்டுட்டு  TYPEWRITERபடத்தை போட்டு இருக்காளேன்னு யோசிக்கிறீங்களா?  முழுக்க படியுங்க.  படிச்சுட்டு சொல்லுங்க.


24.12.2012 அன்னிக்கு கார்த்தால 0715 மணிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சேன்னு நன்மங்கலம் நீல வர்ணப் பெருமாளை தரிசனம் பண்ண நன்மங்கலம் ரோட்டில் திரும்பி ஒரு பத்தடிதான் நடந்திருப்பேன்.  இளையராஜா / ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை மாதிரி என் காதுல டைப் அடிக்கற ஓசை கேட்டுது.  நிமிர்ந்து பார்த்தா ‘VINOD TECHNICAL INSTITUTE’.  ஆஹா, இந்த இன்னிசையைக் கேட்டு எவ்வளவு நாள், ஏன் வருஷமே ஆச்சு.  ஆமாம் இப்ப COMPUTERல தான டைப் அடிக்கறோம். சத்தமே கேக்காதே, FEATHER TOUCH.  




செய்தித்தாள்களில் 2011ஆம் ஆண்டு வந்த இந்த செய்தியைப் படித்தபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர்
மும்பை : உலகின் கடைசி டைப்ரைட்டிங் நிறுவனமான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்,மும்பையில் உள்ள தனது உற்பத்தி யூனிட்டை மூடியுள்ளது. உலகம் முழுவதும் ஒருகாலத்தில், அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட டைப்ரைட்டிங்,கம்ப்யூட்டர் வருகையால் கணிசமாக குறைந்தது. மேற்கத்திய நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன்பே, தட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நி‌லையில், சமீபகாலமாக, டைப்ரைட்டிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தட்டச்சு பயன்பாடு குறைந்து,கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டன. ஆனாலும், கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம்,டைப்ரைட்டிங் மிசின்களை தயாரித்து வந்தது. உலகின் கடைசி டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ‌கோத்ரெஜ் அண்ட் போய்ஸ் நிறுவனம், அதனை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுகுறித்து, இதன் உயர் அதிகாரி மிலிந்த் துக்லே கூறியதாவது,கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், இதன் பயன்பாடு குறைந்து விட்டது. பயன்பாடு குறைந்ததால், தங்களுக்கு வரும் ஆர்டர்களும் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போது, தங்களிடம் 200 டைப்ரைட்டிங் மெசின்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இவையும் அரபுமொழி டைப்ரைட்டிங் மெசின்களே ஆகும் என்றும், இதனையடுத்து வேறவழியின்றி உற்பத்தி யூனிட்டை மூடிவிட்டதாக அவர் தெரிவித்தார்.




கோத்ரெஜ் கம்பெனியின் டைப்ரைட்டர் பிரிவு 1955ல் (நான் அவதரித்த ஆண்டாக்கும்) தொடங்கப்பட்டது இந்தியாவின் சுதந்திரத்துக்கும் தொழில்மயத்துக்கும் டைப்ரைட்டர் ஓர் அடையாளம் என்று பிரதமர் நேரு புகழாரம் சூட்டினார்.



ஆனால் சத்திரத்துத் திண்ணையில் படுத்திருந்த நாயை விரட்டி விட்டு மனிதன் ஆக்ரமித்துக் கொள்வது போல் டைப்ரைட்டரை விரட்டி விட்டு அலுவலகம், வீடு, தொழிற்சாலைகள் என்று எல்லா இடங்களையும் கம்ப்யூட்டர் ஆக்கிரமித்துக் கொண்டது.  போர்ட்டபிள் டைப்ரைட்டர்களின் இடத்தை லேப்டாப் பிடிங்கிக் கொண்டது. 


பிரதமர் நேரு சொன்ன அடையாளத்தை அடையாளமே இல்லாமல் அழிக்கத் தொடங்கியது கம்ப்யூட்டர்.







நாங்க படிச்ச காலத்துல எல்லாம் SSLC முடிச்சதும், ஏன் பத்தாவது முடிஞ்ச லீவுலயே TYPEWRITING CLASS சேர்த்துடுவாங்க.  விருப்பம் இருந்தால் அப்படியே சுருக்கெழுத்தும்.  எத்தனையோ குடும்பங்கள்ள விளக்கேத்தி வெச்சிருக்கு இந்த TYPEWRITING & SHORTHAND இரண்டும்.



நான் GOVERNMENT POLYTECHNIC FOR WOMENல் (தற்போதைய பெயர்DHARMAMBAL POLYTECHNIC) மூன்று வருட DIPLOMA IN COMMERCIAL PRACTICE COURSE 1970 – 1973 படித்தேன்.  அதில் B.COM SUBJECTS மற்றும் ENGLISH TYPEWRITING, SHORTHAND HIGHER.  


அதே நேரத்தில் என் COUSIN கோவையில் இதே COURSE  இரண்டு ஆண்டுகள் படித்து கோவை SUGARCANE BREEDING INSTITUTE ல் பணியில் சேர்ந்திருந்தார்.  அதனால்தான் என் அம்மா நீயும் இதேDIPLOMA படி, கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.  முதல் வருடம் காலேஜ் போகவில்லையே என்று வருத்தம் கொஞ்சம் இருந்தது.  இரண்டாம் வருடம் வருத்தத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.  



3 வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த உடனே நல்ல அரசாங்க வேலை.  ஆயிற்று 39 வருடங்கள் 3 மாதங்கள் பணியாற்றிவிட்டாகிவிட்டது.  இன்னும் பாக்கி இருப்பது 1 வருடம் 5 மாதம்.

இதே குலதெய்வம் தான் சமூக அந்தஸ்தைக் கொடுத்தது, பலரின் பாராட்டையும் பெற்று கொடுத்தது. 



இப்பதானே கம்ப்யூட்டர் ஜாலம் எல்லாம்.

டைப்ரைட்டரில் ஒரு W, அதுக்கு மேல ஒரு &,  அந்த & மேல ஒரு /, ஒரு SOLDIER மாதிரி வரும். 

அப்புறம் ஒரு தேர் மாதிரி டிசைன் செய்தது.   சின்னச் சின்ன விஷயங்கள்.  எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அந்தக் காலத்துல என் அப்பா ஒரு கடிதத்தை சிவலிங்கம் மாதிரி அடித்திருப்பார். 


 ஆனா ஒண்ணுங்க. இந்த செய்தியையும் கேளுங்க.
ரொம்ப அலட்டிக்காத கம்ப்யூட்டரே.

”மிசோரம் மாநிலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுவதால், அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு,டைப்ரைட்டிங் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.”



யார் கண்டது, மீண்டும் பழைய டைப்ரைட்டர்களுக்கு பூரண கும்ப வரவேற்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். 



என்னை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற ‘VINOD TECHNICAL INSTITUTE’க்கு நன்றி.
 இப்ப சொல்லுங்க, எனக்கு, என் குடும்பத்துக்கு, ஏன் எத்தனையோ குடும்பங்களுக்கு இந்த TYPEWRITER (அதோட மவுசு குறைந்தாலும்) குலதெய்வம் தானே.

மீள் பதிவு