இன்று
(14.12.2019) நட்சத்திர பிறந்த நாள் காணும்
கோபு அண்ணாவிற்கு எங்கள் இனிய பிறந்த நாள்
நல் வாழ்த்துக்கள்.
எங்கள் பெண்ணுக்குக் குழந்தை பிறக்கும் வரை வலைப்
பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை என்று ஒரு சபதம் (!) எடுத்துக் கொண்டேன். உம்மாச்சித் தாத்தா (மகா பெரியவா) வின் அருளால்
27.07.2019 அன்று என் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அமெரிக்காவில்
இருந்து இந்தியா வந்த பிறகு பதிவு போட ஆரம்பிக்கலாம் என்றால் இரண்டு பேத்திகளின் அன்புத்
தொல்லையில் இருந்து விடுபடவே முடியவில்லை.
அத்துடன் திருச்சியில் ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. என் அகத்துக்காரர் ரயிலுக்கு பயணச்சீட்டு எடுக்கும்
முன்னேயே நாம் கண்டிப்பாக கோபு அண்ணா வீட்டிற்குச் செல்லலாம் என்று சொன்னார். ஆஹா கரும்பு தின்னக் கூலியா? அத்துடன் நான் கேட்காமல் அவரே சொன்னது இரட்டிப்பு
மகிழ்ச்சி.
பூர்வ
ஜென்ம பந்தம்.
சில வீடுகளில் நுழையும் போதே ஒரு அன்னியோன்னிய
உணர்வு ஏற்படும். எனக்கு அப்படித்தான் கோபு
அண்ணாவின் வீட்டிற்குள் நுழையும் போது தோன்றியது.
நாங்கள் முன்பே என் மகளின் திருமணம் முடிந்ததும் அண்ணாவின் வீட்டிற்கு எங்கள்
சம்பந்தி, மகள், மாப்பிள்ளையுடன் சென்றிருந்தோம்.
அது முதல் சந்திப்பு. இப்பொழுது 5 வருடங்கள்
கழித்து மீண்டும் நானும் என் அகத்துக்காரரும் சென்றோம். ஆனால் ஏதோ அடிக்கடி சந்தித்தது போல் தோன்றியது. போன ஜன்மத்தில்
உறவுக்காரராகவோ அல்லது நண்பர்களாகவோ இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
ஜாடிக்கேத்த மூடி
”மூன்று பத்து ஆண்டுகளாக
அடுக்களையில் நான் இட்டு
அவித்த இட்டலிகள்,
சுட்ட வட்ட, வட்ட தோசைகள்,
சப்பாத்திகள்,
லிட்டர், லிட்டராக வைத்த
சாம்பார், ரசம், இத்யாதி,
இத்யாதி..
எண்ண முடியுமா?
அளக்கத்தான் முடியுமா?”
மன்னியைத்தான்
சொல்கிறேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் என் இந்த கவிதையை(!) மறக்காம ஞாபகமாக சொன்னதை
கேட்டதும் நெகிழ்ந்துதான் போனேன். மன்னியின் சிரித்த முகம், அனுசரணையான பேச்சு, தினம்
தினம் சந்திக்கும் ஒருவரிடம் பேசுவது போல் அன்னியோன்னியம். அதான் ஜாடிக்கேத்த மூடி.
இந்த புகைப்படம் கோபு அண்ணா எடுத்தது. அட நானா இது.
இவ்வளவு அழகாக எடுத்திருக்கிறாரே!
அண்ணாவின் மருமகள் செய்த மல்லிகைப்பூ இட்டலி,
புதினா சட்னி, அருமையான மிளகாய்ப் பொடி, டிகிரி காபி எல்லாம் சாப்பிட்டுவிட்டு கிட்டத்தட்ட
ஒரு இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடை பெற்ற போது மனதுக்கு மிகவும்
நிறைவாக இருந்தது.