Wednesday, January 14, 2015

இனிய பொங்கல் திருநாள் 
நல் வாழ்த்துக்கள்.






 தமிழர்களின் பாரம்பரிய திருவிழா என்றால் அது தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள்தான். அறுவடை திருநாள் என்று அறியப்படும் இத்திருநாள் சங்க காலத்திலேயே தமிழர்களால் கொண்டாடப்பட்டதை இலக்கியங்களில் காண முடிகிறது. தை முதல் நாளில் தங்களுக்கு ஆண்டு முழுவதற்குமான உழைப்பை பலனாக தந்த இயற்கைக்கும், உதவிய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் சர்க்கரை பொங்கலை படையலிட்டு தமிழர்கள் வழிப்பட்டனர். இதுவே பின்னர் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளாக மாறியது.



ஆரம்பத்தில் மழையின் கடவுளான இந்திரனுக்கு தமிழர்கள் விழா எடுத்து கொண்டாடினர். இது தமிழர்கள் மட்டும் அல்ல, வடநாட்டிலும் மாதம் மும்மாரி பொழிவதற்கு காரணமான இந்திரனுக்கு விழா எடுத்ததை கிருஷ்ணாவதார கதையும் விவரிக்கிறது. இன்றைய தினம் போலவே சங்க காலத்துக்கு முன்பும் இந்திர விழாவுக்கு முதல் நாள் அரசின் சார்பில் முரசறைந்து அறிவிப்பு வெளியிடப்படும். 

அப்போது வீதியெங்கும் பழைய மணல் அகற்றப்பட்டு, புது மணல் பரப்பப்படும். வீடுகளில் வெள்ளையடிக்கப்படும். அத்துடன் காவல் தெய்வங்கள் தொடங்கி சிவன் கோயில்கள் வரை சிறப்பு வழிபாடுகளை மக்கள் நடத்தியுள்ளனர். இந்த விழா மார்கழி மாதம் தொடங்கி தை முதல் நாள் வரை மொத்தம் 28 நாட்கள் கொண்டாடப்பட்டுள்ளது. தை முதல் நாளில் புதுப்பானையில் அறுவடை செய்த நெல்லை இட்டு பொங்கலிட்டு இந்திரனுக்கு நன்றி செலுத்தினர் தமிழர்கள்.


அதன் பின்னரே, சூரியன் இயற்கைக்கு அடிப்படையானவர் என்ற ரீதியில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக தை முதல்நாளில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மறுநாள் உழவர் திருநாள் அல்லது மாட்டு பொங்கல் என்றும், 3ம் நாள் காணும் பொங்கல் என்றும் மூன்று நாள் விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. 
அதற்கு முன்னதாக மார்கழி மாத கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் இருக்கும் பழைய உபயோகமற்ற பொருட்களை பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற இலக்கை எட்டும் அர்த்தத்தில் தீயிட்டு கொளுத்துவர். அன்றைய தினம் இனிப்பு பலகாரங்களை செய்து பிறருக்கும் வழங்கி மகிழ்வர்.
மறுநாள் வீட்டின் முன்பு சாணமிட்டு மெழுகி அரிசி மாவால் கோலமிட்டு பொங்கலுக்கு வீட்டின் முகப்பை தயார்
படுத்துவர். மேலும், அதிகாலையில் துயிலெழுந்து குளித்து புத்தாடை அணிந்து, செங்கரும்பு, மஞ்சள் கொத்துடன் புதுப்பானையை வீட்டின் முகப்பில் புதிய அடுப்பில் வைத்து புத்தரிசி இட்டு பொங்கலிட்டு, பொங்கலோ, பொங்கல் என்று கூவி சூரியனை வழிபடுவர். இந்த அடுப்பில், மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கோலமிட்டு பூசணி பூவுடன் வைத்த சேகரித்த சாண உருண்டைகளை வைத்தே நெருப்பு மூட்டியே பொங்கலை பொங்க வைப்பர்.


மறுநாள் மாட்டு பொங்கல், ஆண்டு முழுவதும் தங்களுக்கு உதவி கால்நடைகளின் கொம்புகளை சீவி வண்ணமிட்டு அலங்கரித்து மாலையிட்டு அவற்றின் முன்பு பொங்கலிட்டு வழிபடுவர். பின்னர் கால்நடைகள் உண்ட எச்சில் தண்ணீரை மாட்டுதொழுவம் முழுவதும் தெளித்து, பொங்கலோ, பொங்கல், மாட்டு பொங்கல், பட்டி பெருக, பால் பானை பொங்க, நோயும், பிணியும் தெருவோடு போக என்று கூறுவர். மூனறாம் நாள் காணும் பொங்கல், அன்றைய தினம் தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களை சந்தித்து உணவு பண்டங்களை பகிர்ந்து கொள்வதுடன், வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறிக் கொள்வர்.

இந்த அறுவடை திருநாள் தமிழகத்தை தவிர தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை, மொரீஷியஸ், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நாட்டின் மற்ற பாகங்களில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. தனூர் ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியன் இடம்பெயர்தலை அடிப்படையாக கொண்டு இந்த அறுவடை திருநாளை நாட்டின் பிற மாநிலத்தவர் கொண்டாடி மகிழ்கின்றனர்.



மஞ்சளின் சிறப்புகள்

நிறத்தாலும், குணத்தாலும் மங்கலம் தரும் மஞ்சள் பயன்படுத்துவோம், ஆரோக்கியம் பெறுவோம் இந்து கலாசாரத்தில் மஞ்சளுக்கு முதன்மையான முக்கியத்துவம் உண்டு. மஞ்சள், சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை மிக்கது. இது, இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்தது. கணிசமான மழையில் செழித்து வளரும் தன்மை கொண்டது. மஞ்சள் நன்றாக வளர்வதற்கு, 20 முதல் 30 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை தேவை. உலக உற்பத்தியில் ஏறத்தாழ 78 சதவீத மஞ்சள், இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது.
நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. தற்போது கிராமப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மட்டுமே மஞ்சள் பூசும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். அதுவும் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே. பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்துக்கும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மஞ்சள் கொத்துடன் பொங்கல் கொண்டாடும் இந்த தருணத்தில் மஞ்சளை பயன்படுத்தி நாமும் ஆரோக்கியமாக வாழ்வோம்.



வெளிநாடுகளில் அறுவடை திருநாள்

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான அறுவடை திருநாளை அடிப்படையாக கொண்டே கொரிய தீபகற்பம், ஜப்பான், தென்அமெரிக்கா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியாவின் சுமத்ரா உட்பட உலகம் முழுவதும் இந்நாள் வேறு பெயர்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.


நன்றி தினகரன்

2 comments:

  1. மிகவும் அழகான தகவல்கள். மஞ்சள் மகிமையையும் அறிய முடிந்தது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. கோபு அண்ணா

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete