Tuesday, January 27, 2015

கோட்டை இங்கே கோவில் அங்கே




மகனுக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் நானும், என் கணவரும் வேலூருக்கு ஒரு திடீர் பயணம் சென்றோம் 24.01.2015 & 25.01.2015 இரண்டு நாட்களும்.  என்னவர் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா.  சென்னையிலிருந்து வேலூருக்கு நொடிக்கு நாலு பேருந்துகள் இருந்தாலும் முன் பதிவு செய்துதான் ஆக வேண்டும் என்று காலை 9 மணிக்கு கோயம்பேட்டிலிருந்து கிளம்பும் குளிர் சாதன பேருந்தில் இரண்டு இருக்கைகள் முன் பதிவு செய்து விட்டார்.  மகனும் மகிழுந்தில் 24ம் தேதி காலை 745 மணிக்கே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எங்களை விட்டு விட்டுச் சென்றான்.  சிற்றுண்டியை முடித்துக் கொண்டு பேருந்து நிலயத்திற்குள் சென்றோம்.   ஒரு சிறிய மேசை.  அதில் சில காகிதங்கள்.   ஒவ்வொரு நடத்துனராக வந்து கையெழுத்திட்டு விட்டுச் சென்றனர்.   அருகில் சென்று கையெழுத்திட வந்த ஒரு நடத்துனரிடம் “நாங்கள் 9 மணி குளிர்சாதன பேருந்தில் முன் பதிவு செய்திருக்கிறோம்.  அந்தப் பேருந்து எங்கு நிற்கும் என்று கேட்டதற்கு முதல் நடை மேடையில் வரும்.  இங்கு ஒருவர் வருவார், அவரிடம் கேளுங்கள் என்று மேசைக்கு முன்னே இருந்த நாற்காலியைக் காட்டினார்.  10 நிமிடங்கள் கழித்து ஒருவர் வந்து அமர்ந்தார்.   “குளிர் சாதன பேருந்தா.  அது முதல் ப்ளாட்பாரத்துலதான் வரும்.  ஆனா எப்ப வரும்ன்னு தெரியாது, தாமதமாத்தான் வரும்” என்றார்.  நல்ல வேளை “வரும்,  ஆனா வராது”ன்னு சொல்லாம இருந்தாரே.  அவருடைய அருமையான பதிலைக் கேட்டு ஆச்சரியத்துடன் திரும்பி என்னவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தேன்.   அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண் “நான் வாரா வாரம் இதே பேருந்தில்தான் செல்வேன்.  முன்பதிவு கூட செய்யவில்லை.  கொஞ்சம் தாமதமாகத்தான் வரும்.  ஆனால் விரைவாக இரண்டு மணி நேரத்தில் வேலூர் சென்று விடும்” என்றார்.   ஒரு வழியாக 10 மணிக்கு வந்தது பேருந்து.   1005க்குக் கிளம்பி 1230 மணிக்கு வேலூர் சென்றது.  ஏற்கனவே சென்னையிலிருந்தே தொலை பேசியில் வாடகைக் கார் எல்லாம் பேசி முடித்துக் கொண்டிருந்ததால் (அதான் சொன்னேனே என்னவர் முன்னேற்பாடில்லாமல் எந்த இடத்திற்கும் செல்ல மாட்டார் என்று.  ரயிலில் முன் பதிவு செய்திருந்தாலும் நாங்கள் எப்பொழுதும் ரயில் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ரயில் நிலையத்தில் இருப்போம்.) நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குச் சென்றோம்.

 ஆனால் திரும்ப வரும்பொழுது 25.01.2015 அன்று மாலை சரியாக 4 மணிக்கு பேருந்து கிளம்பியது. இரவு 645 மணிக்கு சென்னை கோயம்பேடு வந்து சேர்ந்தது.  மகன், மருமகள், பேத்தி மூவரும் மகிழுந்துடன் காத்திருக்க வீடு வந்து சேர்ந்தோம்.

நாங்கள் சென்ற கோவில்களைப் பற்றிய விவரங்களை என் மற்றொரு வலைத்தளமாகிய http://aanmiigamanam.blogspot.in/ ல் கொடுக்கிறேன்.  கொஞ்சம் தயவு செய்து அங்கேயும் வருகை தாருங்களேன்.

இங்கு வேலூர் கோட்டையைப் பற்றிய விவரங்களைக் கொடுக்கிறேன்.  அப்படியே நான் எடுத்த புகைப்படங்களையும் கொடுத்திருக்கிறேன்.



வேலூர் மாநகரின் மையத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது வேலூர் கோட்டை. கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு  தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டுக்கொண்டுயிருந்தபோது வேலூர், திருப்பதி, சென்னை போன்றவை விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக 1566ல் இருந்த பொம்முநாயக்கர் என்ற குறுநில மன்னரால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது. 

 


கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த கோட்டை வலிமையானது. கோட்டையை சுற்றி அகழியும் வெட்டப்பட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 
நாயக்கர்களிடமிருந்து 1650ல் பிஜப்பூர் சுல்தானால் கைப்பற்றப்பட்டது. 25 ஆண்டுகால ஆட்சிக்கு பின் 1676ல் மராட்டியர்கள் கைப்பற்றினர். 30 ஆண்டு ஆட்சிக்கு பின் 1708ல் டெல்லியை ஆண்ட தௌத்கான் கைப்பற்றினார். அப்போது நவாப்களின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டையிருந்தது. 

கர்நாடகா நவாப்கள் என அழைக்கப்பட்டவர்கள் வேலூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஆற்காட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் டெல்லி தௌத்கான் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக வெளியேறியபோது நவாப்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுதந்திர பகுதியாக மாறின. 

நவாப்கள் ஆங்கிலேயரின் நண்பர்களாக இருந்தனர். நவாப் வசமிருந்த வேலூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. 1760ல் முதல் ஆங்கிலேயர்  அதன் ஆட்சியாளர்கள் ஆனார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் வென்ற இடம் ஆற்காடு. அவர்கள் அங்கிருந்து ஆளும்போது அருகில் இருந்த வேலூர் கோட்டையை வெடிமருந்துகள், இராணுவ வீரர்கள் பாதுகாக்கும் இடமாக வைத்திருந்தனர். 


மராட்டிய புலி திப்புசுல்தான் இறந்தபின்னர் அவரது குடும்பத்தை இங்கு தான் முதலில் சிறை வைத்தனர் ஆங்கிலேயர்கள். அதேபோல் இலங்கை கண்டி மாகாணத்தின் கடைசி அரசர் விக்கிரமராஜசிங்கன் மற்றும் அவரது மனைவி மக்களும் இந்த கோட்டையில் தான் இறக்கும் வரை சிறை வைக்கப்பட்டனர். அதேபோல் விஜயநகர பேரரசின் அரசராக இருந்த ரங்கராயன் இந்த கோட்டையில் வைத்து தான் கொல்லப்பட்டார். 


 சிப்பாய் புரட்சி

ஆங்கிலேயர் தென்னிந்தியாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின் வட இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள். அப்போது 

ஆங்கிலேய இராணுவத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் பணியாற்றினர். இவர்கள் எத்தனை தியாகங்கள் செய்தாலும் அதனை பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இது அவர்கள் மனதில் அனலாய் தகித்துக்கொண்டு இருந்தது. அந்த நேரம் வீரர்களுக்கு பசு, பன்றி நெய் தடவப்பட்ட வெடிகுண்டுகளை போர் களத்தில் பயன்படுத்த வேண்டும் என்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். இதற்கு இரு தரப்பு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனை பயனபடுத்திக்கொண்ட திப்புவின் வாரிசுகள் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்ய திட்டம் வகுத்தனர். அதன்படி நீண்ட திட்டம் வகுத்து மக்களிடம் ரகசிய பிரச்சாரம் செய்து நம்பிக்கையான படை வீரர்கள் மூலம் தகவல் பறிமாறப்பட்டு ஒரு படைதயார் செய்யப்பட்டது. 

1806 ஜீலை 10ந்தேதி புரட்சிக்கான நாளாக ரகசியமாக குறிக்கப்பட்டது. அன்று திப்புசுல்தானின் மகன் ஒருவருக்கு திருமணம்.  
விடியற்காலை புரட்சி தொடங்கியது. ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கோட்டையில் திப்புசுல்தானின் புலி கொடியேற்றட்டப்பட்டது. அடுத்த ஆறு மணி நேரத்தில் ஆற்காடு, சித்தூர் பகுதியில் இருந்து படைகள் வரவழைக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் கோட்டையை மீட்டனர். திப்புவின் வாரிசுகளின் பாதுகாவலர்கள், புரட்சியின் தளபதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அடுத்த சில நாட்களில் திப்புவின் வாரிசுகள் வடமாநிலங்களுக்கும், அவர்களது நம்பிக்கையான தளபதிகள் திருநெல்வேலிக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனுப்பி தங்களது பாதுகாப்பில் வைத்துக்கொண்டனர். இந்த புரட்சி தான் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட முதல் புரட்சியாகும். 

சர்வ மதம்

கோட்டைக்குள் நுழைந்ததும்மே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது. 

கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. திப்புசுல்தான் வாரிசுகள், குடும்பத்தார், உறவினர்கள் கோட்டைக்குள் தொழுகை நடத்த மசூதி கட்டப்பட்டது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம். 

அதேபோல் தென்னிந்தியாவின் முதல் அரபுக்கல்லூரியான ஜாமி ஆ பாக்கியத்துல்ல என்ற கல்லூரி இதன் அருகே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோட்டைக்குள் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், அவரது குடும்பத்தார் பிரார்த்தனை செய்ய 1846ல் புனித ஜான் தேவாலயம் கட்டப்பட்டது. 

அருங்காட்சியகம்

கோட்டைக்குள் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், கிண்ணங்கள், வாள்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருட்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டைக்குள் உள்ள கட்டிடங்கள் திப்பு மகால், ஐதர் மகால், பேகம் மகால், கண்டி மகால், பாதுஷா மகால் என பெயர் வைத்து அழைக்கப்படுகின்றன. 

காவல்துறை பயிற்சி கல்லூரி, வட்டாச்சியர் அலுவலகம், பத்தரப்பதிவு அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் உள்ளே இயங்குகின்றன. 

கோட்டையின் தென்கிழக்கு மூலையில் கோட்டை உச்சியில் தேசியகொடி ஏற்ற 100 அடி கொடிமரம் அமைத்துள்ளனர். இந்த கோட்டை பற்றி 1650ல் வந்த ஜாக் டி கோட் என்ற ஐரோப்பிய பயணி, இது போன்ற கோட்டையை நான் எங்கும் பார்த்ததில்லை என வர்ணித்துள்ளார். வேலூர் கோட்டை வரலாற்றை போற்றும் வகையில் 2006ல் வேலூர் புரட்சி நடந்த 200வது ஆண்டை முன்னிட்டு தபால் தலை வெளியிடப்பட்டது. 

படகு சவாரி


 
கோட்டை அகழியில் படகு சவாரி வசதியை சுற்றுலாத்துறையும் - தொல்பொருள் துறையும் செய்து தந்துள்ளது. தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை படகில் அகழியில் அரை வட்டமடிக்கலாம். கோட்டைக்கு வெளியே மூன்று இடங்களில் பூங்கா வசதி செய்து தந்துள்ளார்கள். விடுமுறை நாட்கள், மாலை நேரங்களில் உட்கார இடம் இல்லாத வகையில் கூட்டம் இந்த பூங்காக்களில் நிரம்புகிறது. குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 

வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட கண்டி மன்னன் விக்ரமராஜா அவனது மனைவிகள் இறப்புக்கு பாலாற்றங்கரையில் முத்து மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிப்பாய் புரட்சியின் போது இறந்த ஒரு தளபதியின் கல்லறை உள்ளே வைக்கப்பட்டுள்ளது. கோட்டைக்கு வெளியே வடக்கு 
பகுதியில் சிப்பாய் புரட்சியில் இருந்த வீரர்கள் நினைவாக நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. 

புதர் மண்டிக்கிடக்கும் வேலூர் கோட்டை தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையை எப்போது வேண்டுமானாலும் சுற்றி பார்க்கலாம். அருங்காட்சியகம், மஹால்களை மாலை 5 வரை மட்டுமே பார்க்க அனுமதி. காதலர்களால் நிரம்பி வழிகிறது கோட்டை.  ஒரு முறை சென்றால் இந்த கோட்டை தனக்குள் வைத்துள்ள வரலாறுகள் நமக்கு பல படிப்பினைகளை, வரலாற்று தகவல்களை வழங்குகிறது. 











அன்றும், இன்றும், என்றும் கோட்டையை காவல் காக்கும் மனிதன் (சிலை).



படகு சவாரிக்கு காத்திருப்பவர்கள்.






இந்தக்கோவில் கோட்டைக்கு எதிரே இருந்தது.  நாங்கள் போகவில்லை.  என்ன கோவில் என்றும் தெரியவில்லை.


5 comments:

  1. வேலூர் கோட்டை பற்றிய படங்களும், சரித்திர விளக்கங்களும் அழகோ அழகாகவே கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  2. அங்கு வேலூரில் தான் நம் வலைச்சர உஷா டீச்சர் [திருமதி உஷா அன்பரசு] அவர்கள் உள்ளார்கள்.

    நம் இருவருக்கும் மட்டுமே அவர்கள் டீச்சர். உண்மையில் அவங்க டீச்சர் இல்லை. ஒரு கம்பெனியின் Chief Accountant ஆக்கும்.

    >>>>>

    ReplyDelete
  3. தங்கள் கணவர் போலவே தான் நானும் ..... ஒரு முன்னெச்சரிக்கை முத்தண்ணாதான். அதில் தவறு ஏதும் இல்லை. CONFIRMED ஆக PROPER RESERVATION இல்லாமல் எங்குமே பயணம் செல்ல மாட்டேன்.

    1 மணி நேரம் முன்பே RAILWAY STATION OR BUS STAND இல் ஆஜராகி விடுவேன். ஆங்காங்கே டாக்ஸி / ஆட்டோ / தங்குமிடம் எல்லாம் பக்காவாக இருக்கணும் எனக்கும்.

    >>>>>

    ReplyDelete
  4. சிலர் மாலை 6 மணிக்குக்கிளம்பும் வண்டியைப்பிடிக்க காலை 6 மணிக்கேபுறப்பட்டும் தலைதெறிக்க ஓடியே வண்டியில் ஏறுவார்கள். நடுவில் வழிநெடுக பல வேலைகளைப் பார்த்துக்கொண்டே செல்வார்கள். எனக்கு அதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. எதிலும் ஒரு டென்ஷன் இருக்கக்கூடாது. ஒரு நாளில், ஒரு நேரத்தில், ஒரேயொரு வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அதுவும் பயணம் செய்யப்போகும் நாளில் வேறு எந்த வேலைகளையும் பார்க்கச் செல்லக்கூடாது.

    >>>>>

    ReplyDelete
  5. வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவாகக்கொடுத்து, தங்களின் எழுத்துக்களில் வேலூர் கோட்டைபோலவே மிகவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete