Google+ Followers

Saturday, May 28, 2016

என் இனிய இலங்கைப் பயணம் பகுதி 1

எனது பிறந்த நாளான இன்று (29.05.2016) ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறேன்.  
என்ன செய்ய.  
குடும்பத் தலைவின்னா சும்மாவா?   
சரி இனி நிறைய எழுதணும்ன்னு வாழ்த்துங்கள்.


முதல் வெளிநாட்டுப் பயணம்
சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது மாம்பலத்தில் இருந்து 5B பேருந்தைப் பிடித்து திருமயிலை செல்வது போல் இருக்கலாம்.  ஆனால் எங்களைப்போல் வெளிநாட்டுப் பயணம் வாய்க்குமா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு…………   ரொம்பவும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கத்தானே செய்யும்.  (PASSPORTஏ இப்பதானே எடுத்தோம்).  கடல்கடந்து ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் அந்தமானுக்கு.  அதுவும் நம் நாட்டைச் சேர்ந்ததுதானே.   5 நாட்கள் இலங்கைப் பயணம் ஒன்று ஏற்பாடு செய்தோம்.   ரொம்பவும் ஆர்வமாக காத்திருந்த நாள் வந்தது,
(இதுக்கே இப்படீன்னா….)

மே மாதம் 3ம் தேதி காலை 10 மணி விமானத்தில் நானும் என் கணவரும் புறப்படத் தயாராகி விட்டோம்.   10 மணி விமானத்திற்கு காலை 7 மணிக்கே கிளம்பி விட்டோம். மகன் விமான நிலைத்தில் கொண்டு விட்டு விட்டுச் சென்றான்.CHECK IN முடிந்து EMIGRATION க்கு சென்றோம்.  CHECK IN க்யூவில் நிற்கும் போதே என் கணவர், ’பாரு, நீ வெச்சிருக்கற இட்லி பொட்டலம், தண்ணி பாட்டில் எல்லாம் குப்பைத் தொட்டிக்குதான் போகப் போறது.  இதெல்லாம் வேண்டாம்ன்னா கேக்கறயா, தண்ணியையாவது குடிச்சு காலி பண்ணு’.  என்றார்.   நான் பதிலே சொல்லலை.  IMIGRATION முடிந்து இட்லி சகிதமாக இடம் தேடி உட்கார்ந்து காலை சிற்றுண்டியை 9 மணிக்கு முடித்துக் கொண்டோம்.

 நாங்கள் பயணித்த விமானம்

ம்ம்ம். விமானத்தில் ஏறியாச்சு.  அழகான புடவைக்கட்டுடன் விமானப் பணிப் பெண்கள்.  ’AYU BOWAN’  (LONG LIVE என்று அர்த்தமாம்) வரவேற்றார்கள். 
நம்ப மதுரைப் பக்கம் எல்லாம் பின் கொசுவம் வைத்துக் கட்டுவார்களே, கொஞ்சம் அதுக்கு தங்கச்சி மாதிரி ஒரு கட்டு.  எனக்கு ரொம்பப் பிடித்தது.  மீண்டும் ஒரு முறை இலங்கைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால் (ஆசையைப் பார்ரா) கண்டிப்பாக அவர்கள் மாதிரி புடைவை கட்டிக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த முறை வாய்ப்பை தவற விட்டு விட்டேன்.

சிறுவர், சிறுமியருக்கு வரை புத்தகமும் வண்ண பென்சில்களும் அடங்கிய ஒரு உரையை கொடுத்தார் விமானப் பணிப்பெண்.  


அட இந்த சிறுமி அதை வாங்கி அழகாக வைக்கிறாள் பாருங்கள்.
மிகவும் சிறிய குழந்தைகளுக்கு SOFT TOYS கொடுப்பார்களாம்.  (எல்லா அயல் நாடு செல்லும் விமானங்களிலும் இப்படி கொடுப்பார்களாமே– இப்ப தானே நமக்கு தெரியறது).

எங்களுக்கும் குடுத்தாங்க.  அதை ஏன் கேக்கறீங்க.  பொங்கல் மாதிரி, அரிசியும், முழுப்பயறும் போட்டு வேக வைத்து தட்டில் கொட்டி பெரிய வில்லைகளாக.  நீங்க எதிர்பார்க்கற மாதிரி இல்லீங்க.  மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை இதெல்லாம் மருந்துக்குக் கூட இல்ல.  அதான் சொன்னேனே பொங்கல் மாதிரின்னு.  ம்ம்ம்ம். அதுக்கு தொட்டுக்கு அது அதை விட அருமை.  வெங்காயம், புளி, உப்பு அவ்வளவுதான்.  (வெந்ததுதான் பச்சையாக இல்லை). அப்புறம், ஒரு கப்பில்  யோகர்ட் – அதான் தயிரில் சர்க்கரை போட்டு,  அப்புறம், காபி அல்லது டீ,  ஒரு கப்பில் சர்க்கரை, பால் பொடி, போட்டுக்கொண்டால் அவர்கள் காபி அல்லது டீ டிகாக்க்ஷனை சுடச்சுட ஊற்றுகிறார்கள்.   ரொம்ப கஷ்டப்பட்டு அந்த பொங்கல் மாதிரியை முழுங்கி வெச்சேன்.  தொட்டுக்க வைத்ததை தொடவே இல்லை.   கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பாத்தா நம்பாளு (அதான் என்ற ஊட்டுக்காரர்) சாப்பிட்டு முடிச்சுட்டார்.  ஏங்க வீட்டுல உப்பு கம்மி, காரம் கம்மி, 33 வருஷமா என்ன சமைக்கிறன்னு அப்பப்ப நக்கீரரா இருக்கறவரு இங்க பாத்தா கப்பு சிப்பு.  ம்  தட்டு காலி.  நான் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பு,  நம்ப அருமை தெரியறதுக்காகவே இவங்கள வெளியில இந்த மாதிரி அடிக்கடி கூட்டிக்கிட்டுப் போகணும்.   

ஒன்றரை மணி நேர பயணம் என்றார்கள்.  ஒரு மணி நேரத்திலேயே கொழும்பு விமான நிலையம் சென்று அடைந்து விட்டது விமானம்.    

வெளியே வந்து  EMIGRATION வரிசைக்கு சென்ற போது, எங்களைப் பார்த்த உடனே இந்திய PASSPORT இருந்தால் FORM வேண்டாம்.  PASSPORT மட்டும் காண்பித்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள்.   பார்ரா நம்ப PASSPORTக்கு இருக்கற மரியாதையை என்று பெருமிதப்பட்டுக் கொண்டேன்.  
உள்ளுக்குள் கொஞ்சம் பயம், ஒருவேளை நம்மை அழைத்துச் செல்ல யாரும் வராவிட்டால்.   மகனிடம் கிளம்பும் போதே சொல்லி வைத்திருந்தேன்.  MEETING அது இது என்று பார்க்கவில்லை என்று சொல்லக்கூடாது.  1130 மணியிலிருந்து WHATSAPP ஐயே பார்த்துக் கொண்டிரு என்று.   அவன் எல்லாம் கண்டிப்பா வருவா போம்மா என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.   வெளியில் வந்ததும் PLACARD வைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டே வந்தோம்.  நல்லவேளை என்னவரின் பெயர் கொண்ட பதாகையைப் பார்த்ததும் அப்பாடா என்றாயிற்று.  (பதாகை – பார்த்தீங்களா, இலங்கைக்குள் காலடி வைத்ததும் என்ன மாதிரி தூய தமிழ் வருது பாருங்க.  ஆமாம்.  அவங்க தமிழ் என்ன ஒரு அழகு).   

திரு மாலிக், ஓட்டுனர் மகிழுந்துடன் எங்களுக்காகக் காத்திருந்தார்.  

வெளியே வந்து மகிழுந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த விமானப் பணிப்பெண்கள்.  
என்னவர் 


BANK OF CEYLON ல் டாலர்களைக் கொடுத்து இலங்கைப் பணமாக மாற்றிக் கொண்டு மகிழுந்தில் ஏறி அமர்ந்தோம். 

தொடரும்..............