Sunday, April 30, 2017

முதல் பரிசு



என் எழுத்துக்குக் கிடைத்த முதல் பரிசு.

‘பண்புடன்’ ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் என் சிறுகதை ‘காவல்’ எனக்கு ”இரண்டாம் பரிசை”ப் பெற்றுக் கொடுத்துள்ளது.

https://groups.google.com/forum/?fromgroups#!topic/panbudan/GOQ1PbHjWbQ

உங்களுக்காக ‘காவல்’ சிறுகதையை மீண்டும் இங்கு பதிகிறேன். 
காவல்

     ஆச்சி, என் புள்ளையைப் பாத்தீங்களா ஆச்சி? பன்னண்டு மணிக்கு ஸ்கூல்விட்டா பன்னண்டேகாலுக்கு வீட்டுல இருப்பான். இப்ப மணி ஒண்ணரை ஆச்சு. இன்னும் வீட்டுக்கு வரலயே ஆச்சி

     நான் இங்கயேதாம்மா உக்காந்திருக்கேன்.  காலையில நீ புள்ளையை இஸ்கூலுக்கு கூட்டிப் போறப்போ பாத்தேன்.  புள்ளையை இப்ப பார்க்கலயே.  நீ பதறாதம்மா.  முதல்ல இஸ்கூலுக்குப் போய் பாரு” என்றாள் பெட்டிக்கடை ஆச்சி.

            “சரிங்க ஆச்சி” 

     இன்னிக்கு சனிக்கிழமை.  நாளைக்கு ஸ்கூல் வேற லீவு.  ஸ்கூல மூடறதுக்கு முன்னாடி போய் சேரணுமே” என்று புலம்பிக் கொண்டே ஸ்கூல் இருக்கும் திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். 

பள்ளி வாட்ச்மேன் கேட்டைப் பூட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேகமாக ஓடினாள். “வாட்ச்மேன், கேட்டை பூட்டாதீங்க.  என் பையனைக் காணும்.  இன்னும் வீட்டுக்கு வரல” என்று கத்திக்கொண்டே ஓடினாள்.

“எல்லா புள்ளைங்களும் வூட்டுக்குப் போயிட்டாங்களேம்மா

“இல்ல வாட்ச்மேன் தயவு செஞ்சு உள்ள போய் பாப்போம் வாங்க”  என்று சொல்லிக் கொண்டே கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடினாள்.

“நான் தான் சொன்னேனே அம்மா.  பாருங்க ஸ்கூல்ல ஒரு ரூம்புலயும் ஒரு புள்ள கூட இல்ல. வீட்டுக்குப் போய் புள்ள வந்துட்டானான்னு பாருங்க.  நானும் அக்கம்பக்கத்துல தேடறேன்.  கவலைப் படாம போங்கம்மா.  கண்டிப்பா பையன் கிடைச்சுடுவாம்மா”.

மறுபடியும் வீட்டிற்கு வந்து பையன் வராததைக் கண்டு பதறி, பயந்து கணவனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.

“எல்லா இடத்துலயும் தேடிப் பாத்தியா?”

“பாத்துட்டேங்க.  ஸ்கூலுக்குப் போய் அங்கயும் பாத்துட்டேங்க.  எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. ஏற்கனவே ஒண்ணை பறி கொடுத்துட்டோம்“சரி, நீ கவலைப் படாத நான் போய் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு வரேன்.   நம்ம பையன் பத்திரமா இருப்பான்”.  மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டானே தவிர அவனுக்கு கையும் ஓடவில்லை,  காலும் ஓடவில்லை.  மனம் திக்திக்கென்று அடித்துக்கொண்டது.
* * *

     என் செல்போன் அடிக்குது அதை எடு”.

     என்ன ஏட்டு, என்ன விஷயம்.

     சார் ஒரு மிஸ்ஸிங் கேஸ். ஒரு சின்ன பையனை, எட்டு வயசு இருக்குமாம், காணுமாம் சார்”.

     “சரி நான் இதோ கிளம்பி வரேன்.

     ஏங்க சாப்பாடு

     வந்து சாப்பிடறேன்.  ஒரு எட்டு வயசு பையன காணுமாம்

     ஐயய்யோ!. இந்தாங்க இந்த மோரை குடிச்சுட்டு கிளம்புங்க.

     நான் வரணும்ன்னு காத்திருக்காம, தயவு செஞ்சு நீ சாப்பிட்டுடு

     சரிங்க”.
* * *
     நீங்க மார்க்கெட்ல அரிசிக் கடை வெச்சிருக்கீங்க இல்ல.  உங்க பையனதான் காணுமா?  உங்க பெயர் என்னகொஞ்சம் விவரமா சொல்லுங்க சார்.  உங்களுக்கு யாராவது விரோதிங்க இருக்காங்களா?

     அப்படியெல்லாம் யாருமே கிடையாது சார்

     பையனை திட்டினீங்களா? அடிச்சீங்களா?

     
அப்படி எல்லாம் வழக்கமே இல்லீங்க சார்”.

     பையனோட போட்டோ கொண்டு வந்திருக்கீங்களா?

இல்ல சார்.  நான் கடையில இருந்து நேர வரேன். வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வரேன் சார்.

“ஏட்டு, சாரோட போன் நம்பரை வாங்கிக்கிட்டீங்களா?

     இருக்கு சார்

     சரி நீங்க தைரியமா வீட்டுக்குப் போங்க சார், நல்லதே நடக்கும் கவலைப் படாதீங்க 
* * *
     வாங்க ஏட்டு. நாமளும் போய் தேடுவோம்

     சரி சார். சின்ன ஊர்தான சார்.  ஈசியா கண்டு பிடிச்சுடலாம் சார்

     ஏன் ஏட்டு, அரிசிக் கடைக்காரர் வசதியானவரா?  யாராவது குழந்தையை கடத்தி பணம் கிணம் பறிக்கப் பாக்கறாங்களா? சமீபத்துல இங்க அந்த மாதிரி எதுவும் நடக்கல.  ஏன் ஏட்டு, நீங்க இந்த ஸ்டேஷன்ல ரொம்ப வருஷமா இருக்கீங்க இல்ல.  நம்ப ஏரியாவுல அந்த மாதிரி ஏதாவது குழந்தையை கடத்தி இருக்காங்களா?

     சார் அந்த மாதிரி எல்லாம் எதுவும் எனக்குத் தெரிஞ்சு நடந்ததே இல்ல சார்

     அப்ப உங்களுக்குத் தெரியாம எதாவது நடந்திருக்குமா?

     என்ன சார், ஒரு பேச்சுக்குச் சொன்னா..

     பாவம்யா அந்த ஆள். முகமே சரியில்ல.  கடவுளே அந்த குழந்தை கிடைக்கணும்” என்று வாய் விட்டு இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு ஏட்டு “இந்த இன்ஸ்பெக்டர் தேடிக் கண்டு பிடிக்கறதை விட்டுட்டு கடவுள் கிட்ட மனு போடறாரே” என்று நினைத்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்.

     வணக்கம் சார்வணக்கம் சார்

     என்ன மேஸ்திரி, என்ன இன்னிக்கு வேலை நடக்கலியா?

     இல்ல ஏட்டு சார், காலேல சித்தாள் ஒருத்தன் செத்து போய்ட்டான் சார். அதான் லீவு விட்டுட்டேன்.

     ஓ. சரி மேஸ்திரி.  அரிசி கடைக்காரர் பையனைக் காணுமாம்.  அதான் தேடிக்கிட்டு போறோம். வாங்க சார் நாம   போகலாம்”.

* * *
     என்ன ஏட்டு, நாமளும் எல்லா இடத்துலயும் தேடிப் பார்த்துட்டோம்.   இப்ப அவர் வந்தா என்ன பதில் சொல்றது  சரி, போன் அடிக்குது, என்னன்னு போய்ப் பாருங்க”.

     சார், சார், மேஸ்திரி போன்ல பேசறார் சார்.  அந்த பாதி கட்டின கட்டிடத்துக்கு பின்னாடி ஒரு குழந்தை தூங்கிக்கிட்டிருக்காம்.  வாங்க சார் போய் பார்க்கலாம்

     மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்த பையன், இன்ஸ்பெக்டர், ஏட்டு, மேஸ்திரி மூவரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தான். “

            “சார், சார் எனக்கு தெரியும் சார்.  நான் பாத்துருக்கேன் சார்.  இது நாம தேடற பையன் தான் சார்.

     அருகில் சென்று அந்தப் பையனைத் தூக்கிக் கொண்டு, “என்ன கண்ணா, ஏன் இங்க வந்து இப்படி தூங்கிட்டிருந்த” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

     அதுவா அது வந்து, அங்கிள் அங்க பாருங்க.  என்னோட பையைப் போட்டு மூடி வெச்சிருக்கேன்

     என்ன ஏட்டு, பையன் சம்பந்தமில்லாம பேசறான்.  எதைக் கண்ணு மூடி வெச்சிருக்க?

     அது, வந்து, முன்னாடி தங்கச்சி பாப்பா விழுந்து செத்துப் போச்சு இல்ல.  அப்பறம் போன வாரம் டீவில கூட காமிச்சாங்களே.  HAPPY BIRTHDAY அன்னிக்கு ஒரு பாப்பா விழுந்து செத்துப் போச்சே. அதான் வேற எந்தப் பாப்பாவும் அப்டி விழுந்து செத்துப் போகக் கூடாதுன்னு. என்னோட பைய போட்டு மூடி வெச்சுட்டு இங்கயே உக்காந்துட்டிருந்தேன்.  அம்மா குடுத்த பிஸ்கெட்ட எல்லாம் சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன்”.

     சே, ஒரு சின்ன குழந்தைக்கு இருக்கற பொறுப்பு கூட பெரியவங்க நமக்கு இல்ல.  யோவ் மேஸ்திரி, கேட்டியாய்யா? என்னய்யா இது. டீவில காட்டறான், பேப்பர்ல போடறான். எவ்வளவு சொன்னலும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?  ஏதோ உன் நல்ல நேரம்.  எந்த அசம்பாவிதமும் நடக்கல.  இந்த மாதிரி இனிமே நடந்தா நீ கம்பிதான் எண்ண வேண்டி இருக்கும்.  ஜாக்கிரதை

     சார், சார், இனிமே கவனமா இருக்கேன் சார். மன்னிச்சுடுங்க சார்”.

     என் பையன் கிடைச்சுட்டானா?  சார் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்”.

     கடவுளோட அருள்.  அவருக்கு நன்றி சொல்லுங்க.  ஒரு குழந்தையோட அருமை என்னை மாதிரி குழந்தையே இல்லாத ஆளுக்குதான் சார் தெரியும். எனக்கும் கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆச்சு.

     நீங்க ஏற்கனவே ஒரு குழந்தையை பறிகொடுத்துட்டீங்க போல இருக்கு.  ஜாக்கிரதை சார்”.

     அங்கிள், டாட்டா அங்கிள்”.

     “டாட்டா கண்ணு”.

Saturday, April 29, 2017






மலர்ப்படுக்கை








வாழ்க்கை ஒன்றும்

முழு மலர்ப் படுக்கை அல்ல


முள் குத்தாமல்

பார்த்துக் கொள்வதும்,


குத்தினால் பொறுத்துக்கொள்வதும்


நம் கையில் தான்

Thursday, April 27, 2017

மதம்


இன்று உலகம் முழுவதும் மதச் சண்டை தலை விரித்தாடுகிறது.  இது பற்றிய என் கருத்தே அறுசுவை.காமில் வெளிவந்த என்னுடைய இந்த சிறுகதை.

http://www.arusuvai.com/tamil/node/14856 




அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த ராகவன் ”எங்க உங்கம்மா” என்று மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த வித்யாவிடம் கேட்டான். “சலீம் அண்ணா வீட்டுக்குப் போயிருக்காங்க” என்று பயந்து கொண்டே சொன்னாள் வித்யா.
“அவனை அண்ணான்னு சொல்லாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். உங்கம்மாவுக்குத்தான் அறிவே கிடையாது. உனக்குமா? சொந்த அண்ணனை பாலுன்னு பேர் சொல்லி கூப்பிடற. எவனோ உனக்கு அண்ணனா?” என்று கோபமாகக் கத்தினான் ராகவன்.
உள்ளே படுத்துக்கொண்டிருந்த பாலு, அப்பா வந்து ஏதாவது கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தான். அவன் பயந்தது போலவே ராகவன், பாலு படுத்துக்கொண்டிருந்த அறைக்குள் வந்து எட்டிப்பார்த்து விட்டுச் சென்றான்.
”ஓடா உழைச்சு, களைச்சு வீட்டுக்கு வர புருஷனுக்கு ஒரு வாய் காபி குடுக்கக்கூட ஆள் இல்லை” என்று முணுமுணுத்துக்கொண்டே தொலைக்காட்சிப்பெட்டியின் முன் உட்கார்ந்தான் ராகவன்.
”அப்பா காபி இந்தாங்க” என்று பயந்து கொண்டே கொடுத்த வித்யாவிடம் “என்ன உங்கம்மா பிளாஸ்க்ல போட்டு வெச்சுட்டுப் போயிட்டாளா? எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லிக்கொண்டே காபி கோப்பையை வாங்கிக்கொண்டான் ராகவன்.
வாசல் கேட் திறக்கும் ஓசை கேட்டது. “நான் வரேன் ஆன்ட்டி” சலீமின் அக்கா ஜமீலாவின் குரல். ஸ்கூட்டியில் லலிதாவை வீடு வரை கொண்டு விட்டுச் செல்கிறாள் ஜமீலா.
இங்கொன்றும், அங்கொன்றுமாக சிதறிக் கிடந்த ராகவனின் காலணிகளைப் பார்த்த லலிதா, ’ஐயையோ! என்னிக்கும் இல்லாத அதிசயமா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டார் போல இருக்கே. வீடு வேற அமைதியா இருக்கே. என்ன பூகம்பம் வெடிக்கப்போகிறதோ’ என்று பயந்து கொண்டே உள்ளே நுழைந்தாள்.
ஏதாவது ஒரு காரணத்துக்காக வீட்டில் இருப்பவர்களை வறுத்து எடுப்பது ராகவனுக்கு வாடிக்கைதான். ஒருநாள் மதிய சாப்பாட்டில் முடி இருந்தது என்று கத்துவான். இதை ஏன் அங்க வெச்ச, அதை ஏன் எடுத்த என்று வீட்டில் எப்போதும் ஒரே ரகளைதான். ஏதோ ஒரு உப்பு சப்பில்லாத காரணத்துக்காக கத்துவது அவன் வழக்கம். உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்பான். அவன் மிரட்டுகிற மிரட்டலில் ஒழுங்காய் செய்யும் வேலைகளைக்கூட தப்பும் தவறுமாய் செய்து விடுவார்கள். சில நேரங்களில் அவன் எதற்குக் கத்துகிறான், ஏன் தன்னைத் திட்டுகிறான் என்பது கூடப்புரியாமல் விழிப்பாள் லலிதா.
மேலும் ராகவனுக்கு மற்ற மதத்தவர்களைக் கண்டால் அறவே பிடிக்காது. லலிதாவும் எத்தனையோ முறை நயமாகச் சொல்லிப்பார்த்து விட்டாள். “ஏங்க நாமெல்லாம் சாதாரண மனுஷங்க. நமக்கு எதுக்குங்க மதமெல்லாம். நாம என்ன பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கவா போறோம். மனுஷன, மனஷனாப் பாருங்க. நல்ல நண்பர்களா இருக்கறதிலே என்ன தவறு” என்று. ஆனால் ராகவன் மனம் மாறுவதாக இல்லை.
உள்ளே நுழைந்த லலிதாவைப் பார்த்த ராகவன் “என்ன அறிவில்ல ஒனக்கு. எத்தனை தடவை சொல்லறது? ஏன் ரம்ஜானுக்கு செஞ்சு, மீந்த ஓசி ஸ்வீட் ஏதாவது கிடைக்கும்னு அவங்க வீட்டுக்குப் போனியா? எனக்குப்பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் போன?” வழக்கம்போல் விஷம் தோய்ந்த அம்புகளாக வந்து விழுந்தன வார்த்தைகள். மேலும் சலீம் வீட்டுக்காரர்களையும் சொல்ல நாகூசும் வார்த்தைகளால் ஏசினான். எப்போதும் வாய் மூடி மௌனியாக இருக்கும் லலிதாவால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை. தன்னை, பெற்ற பெண்ணைப்போல் அன்புடன் நடத்தும் நல்ல மனிதர்களை அவன் ஏசுவதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
”ஏங்க உங்க மதவெறிக்கு ஒரு அளவே இல்லையா? நம்ப பையன் வலது கை உடைஞ்சு பள்ளிக்கூடம் போய் இன்னியோட 15 நாளாச்சு. இந்த 15 நாளும் அந்தப் பையன் சலீம் நம்ப வீட்டுக்கு வந்து என்ன பாடம் நடந்ததுன்னு பாலுவுக்கு சொல்லிக் கொடுத்து, நோட்ஸ் எழுதிக் குடுத்து – இத்தனைக்கும் அவங்களுக்கு ரம்ஜான் நோன்பு. நோன்பு இருக்கற அந்தக் குழந்தை இந்த நேரத்தில் கூட தினமும் நம்ப வீட்டுக்கு வந்துட்டுப்போறான். தேர்வுக்குள்ள நம்ப பாலுவுக்கு கை சரியாகணும்னு அவங்க வீட்ல ஒவ்வொரு தொழுகையிலேயும் வேண்டிக்கறாங்களாம். எங்கோ யாரோ தப்பு செய்தா அதுக்கு ஏங்க ஒட்டு மொத்தமா எல்லாரையும் வெறுக்கறீங்க?
போன வருஷம் கஷ்டப்படறான்னு பத்தாயிரம் ரூபா கொடுத்து உதவினீங்களே உங்க நண்பர் முருகன். அவர் பையன் ரமேஷ் கூட நம்ப பாலுவோட வகுப்பிலதான் படிக்கிறான். அவங்க வீட்ல யாரும் ஒருநாள் கூட நம்ப பையனை வந்து எட்டிக்கூட பார்க்கல. நான் அவங்களை தப்பா சொல்லல. உங்க மதத்தைச் சேர்ந்தவங்க யாராவது தப்பு செய்தா என்ன செய்வீங்க? வீட்டை விட்டு தள்ளி வெச்சுடுவீங்களா? இல்ல ஊரை விட்டே தள்ளி வெச்சுடுவீங்களா?”
இத்தனை நாளாக மனதில் தேக்கி வைத்திருந்த கோபம் மடை திறந்த வெள்ளமாக வெளியே வந்து விட்டதோ? இப்படிப் பேசுவது நம்ப அம்மாதானா என்று ஆச்சரியத்துடன் ஆவென்று வாய் பிளந்து கொண்டு பார்த்தனர் பாலுவும், வித்யாவும். உண்மை சுடவே பதில் சொல்ல முடியாமல் வாய் மூடித் தலை குனிந்து அமர்ந்து கொண்டிருந்தான் ராகவன்.


என் சிறுகதை 'அல்பம்'. 
அறுசுவை.காமில் வந்தது

ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது பற்றிய சிறுகதை.


இதோ உங்களுக்காக



பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையைத் தேடி சாய்ந்து வசதியாக உட்கார்ந்து கண்களை மூடிய நித்யா, ‘அப்பாடா! வீடு வரதுக்குள்ள முக்கால் மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போட்டுலாம்’ என்று நினைத்தாள். அவள் கண்களை மூடி ஐந்து நிமிடம்கூட ஆகி இருக்காது.
”ஏன் மாமி, உங்க பக்கத்தாத்துப் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுத்தா?”
“இன்னும் ஆகலியே. ம். அவாளும் நாலு வருஷமா பாத்துண்டிருக்கா.”
”ஓ, அது சரி நேத்து உங்க தெருவில என்ன சண்டை?”
“அதுவா.............
“ஆரம்பிச்சுட்டாங்கப்பா. இன்னும் எத்தனை பேர் தலையை உருட்டப்போறாங்களோ? கண்ணை மூடிக்கலாம். காதை மூட முடியாதே” என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டாள் நித்யா.
“ஏன் மாமி, உங்க வீட்டு மாடிலே புதுசா குடி வந்திருக்காளே, அதான் சிகப்பா, ஒல்லியா, அழகா”
“ஓ பத்மாவா! யாரோடையும் ரொம்ப பேச மாட்டேங்கறா. ரெண்டு மூணு தரம் கோவில்ல பாத்தேன். ஒரு சிரிப்போட நிறுத்திட்டா. போஸ்ட்மேன் அவங்களுக்கு வந்த கடிதத்தை எங்க வீட்டுலே போட்டுட்டுப்போயிட்டான். அதை கொண்டு குடுக்கப்போனேன். வீட்டை ரொம்ப சுத்தமா வெச்சிருந்தா. வீடு கிளி கொஞ்சறதுன்னு சொல்லலாம் போயேன். பழைய பால் கவரையெல்லாம் கூட அழகாக அடுக்கி வெச்சிருந்தா. கேட்டேன். பழைய பேப்பர்காரனுக்கு போடுவாளாம்.”
”பத்மா! நம்ப அம்மாவா இருக்குமோ?” இது நித்யா.
”ஐயய்யே! நான் பால் கவரையெல்லாம் அன்னன்னிக்கே தூக்கி எறிஞ்சுடுவேன் மாமி”
”நான் கூடத்தான். இதையும் மிஞ்சற மாதிரி ஒரு விஷயம் சொல்றேன் கேளு. காலி ஸ்வீட் பாக்சையெல்லாம் தேச்சு அலம்பி எடுத்து வெச்சிருந்தா தெரியுமோ?”
“ஐயே அல்பம்”
”இத்தனைக்கும் மாமா பேங்க் மானேஜர். ஒரே பொண்ணுதானாம் அவங்களுக்கு. அந்தப்பொண்ணும் வேலைக்குப்போறாளாம்.”
‘நம்ப வீட்டைப்பத்தித்தான் பேசறாங்களோ? எழுந்து போய் நறுக்குன்னு ரெண்டு கேள்வி கேட்டுடலாமா? ஒருவேளை அவங்க வேற யாரையாவது பத்தி பேசிண்டிருந்தா அசிங்கமாயிடுமே. இதென்ன! ஊர்லே பத்மான்னு வேற யாராவது இருக்கக்கூடாதா, அவங்க கணவர் பேங்க்ல மானேஜரா இருக்கக்கூடாதா, அவங்களுக்கு ஒரே பொண்ணுதான் இருக்கக்கூடாதா?’ இப்படி யோசிக்க, யோசிக்க போரடித்தது நித்யாவுக்கு. எப்படா வீடு வரும் என்றிருந்தது.
* * *
ஒருவழியாக பேருந்தை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டிற்குள் நுழையும்போதே அவள் அம்மா ஏற்றி வைத்திருந்த ஊதுவத்தியின் மணமும், மெல்லிய குரலில் அம்மா பாடும் பாட்டும் நித்யாவிற்கு உற்சாகத்தைத் தந்தது.
அழைப்பு மணி ஒலி கேட்டு கதவைத் திறந்த பத்மா, “வா, வா, என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட. கை, கால் அலம்பிண்டு வா, உனக்குப்பிடிச்ச பூரி, சென்னா செஞ்சிருக்கேன்” என்றாள்.
பளிச்சென்றிருந்த சமையலறை மேடையிலேயே ஏறி உட்கார்ந்து கொண்டு அம்மா கொடுத்த பூரியைப் பிய்த்து சென்னாவுடன் சேர்த்து வாயில் போட்ட நித்யாவின் கண்களில் எதிரே இருந்த அலமாரியின் கீழ் தட்டில் ஒரு கவரில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பால் கவர்கள் பட்டன.
“அம்மா, நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே? எதுக்கு இந்த பால் கவரையெல்லாம் சேத்து வெச்சிருக்க? தூக்கிப்போட வேண்டியது தானே” என்றாள் நித்யா.
“அதுவா, நீதானே நித்யா தீபாவளி அன்னிக்கு சொன்ன. பால்கவர், ப்ளாஸ்டிக் கவரையெல்லாம் குப்பைத்தொட்டிலே போட்டுடறா. பட்டாசு வெடிச்சு குப்பைத்தொட்டில விழுந்து புகையா வரது. இந்தப்புகை உடம்புக்குக் கெடுதல்ன்னு. அதோட பழைய பேப்பர்காரன் இதை வாங்கறான்னா பாவம் அவனுக்கு ஒரு அஞ்சோ, பத்தோ லாபம் இருக்கும் இல்லியா?” என்றாள் பத்மா.
“அது சரி. இந்த காலி ஸ்வீட் டப்பாவையெல்லாம் எதுக்குமா தேச்சு அலம்பி பத்திரமா எடுத்து வெச்சிருக்க. தூக்கி எறியக்கூடாதா?” என்று கேட்டாள் நித்யா.
“அதுவா. இன்னிக்கு கார்த்தாலே நீ என்ன செஞ்ச?”
“என்ன செஞ்சேன்?”
“டிபன்பாக்சை வெச்சுட்டுப்போயிட்ட.”
“ஆமாம்மா. சாரிம்மா. ஆனா அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம். “
“இருக்கே. உன் ப்ரெண்ட்சுக்கும் சேர்த்து 10 இட்லியும், கொத்தமல்லி சட்னியும் வெச்சிருந்தேன். என் நாக்கு நீண்ட தேவதையே அதை அப்படியே வெச்சிருந்தா நீ வந்து சாப்பிடவா போற. அயர்ன் துணி குடுக்க வந்த பையன் கிட்ட இட்லி சாப்பிடறயான்னு கேட்டேன். குடுங்கம்மா. எடுத்துட்டுப்போய் நானும் தங்கச்சியும் சாப்பிடறோம்ன்னு அந்தக் குட்டிப்பையன் பொறுப்பா சொன்னான். காலி ஸ்வீட் டப்பால இட்லியும், சட்னியும் போட்டு குடுத்தேன். இதுல குடுத்தா டப்பா திரும்ப வரலயேன்னு கவலைப்பட வேண்டாம். கவர்ல எல்லாம் குடுக்க எனக்கு இஷ்டமில்ல, இப்ப புரியறதா” என்றாள் பத்மா.


எச்சில் கையுடனேயே மேடையில் இருந்து குதித்து இறங்கி வந்து “அம்மான்னா அம்மாதான்” என்று பத்மாவின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள் நித்யா. இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறாள் என்று புரியாமல் விழித்துக்கொண்டே மகளின் முத்தத்தை ரசித்தாள் பத்மா.

Saturday, April 22, 2017


இன்று சர்வ தேச பூமி தினம் கடை பிடிக்கப்படுகிறதாம். 

பூமித்தாயின் சார்பில் இந்த கவிதையை உங்கள் முன் வைக்கிறேன். 

IN AND OUT CHENNAI DEC 16 - 31 இதழில் வெளிவந்த என் கவிதை.  இங்கு உங்களுக்காக மீண்டும் பதிந்துள்ளேன்.



ஏர் கொண்டு உழுதாய்
விதை விதைத்தாய்
களை எடுத்தாய்
கதிர் அறுத்தாய்
போரடித்தாய்
வலிபல பொறுத்தேன்
வையத்து மக்கள்
பசி பிணி போக்கத்தானே,
வாய் வாழ்த்தாவிட்டாலும்
வயிறு வாழ்த்துமே என்று
வாளாதிருந்தேன்.

என்னை வெட்டிக் குழைத்து
மண்பாண்டம் செய்தாய்
பாவம் பிழைக்கத்தானே என்று
பேசாதிருந்தேன்
சோறு சமைக்கத்தானே என்று
சோகத்தை மறைத்திருந்தேன்
அகல் விளக்காக்கி அகமகிழ்ந்தாய்
இருள் நீக்கி ஒளியேற்றத்தானே
என்று அமைதியாய் இருந்தேன்
பலப்பல கனிமங்களை உனக்கு
வாரி வழங்கி உன் வாழ்க்கையை
வளமாக்கினேன்.

ஏரிகளையும்நீர் நிலைகளை தூர்த்தும்
வயல்வெளிகளை அழித்தும்
மாட மாளிகைகளையும்,
கூட கோபுரங்களையும் கட்டி
என் மேல் பாரத்தை ஏற்றினாய்.
என்னை அழகாக்கி
நீயும் மகிழ்கிறாய் என்று
பகல் கனவு கண்டிருந்தேன்.


ஆனால்
என் தோல் சுருங்கும் அளவுக்கு,
என் முகம் வாடும் அளவுக்கு
என் மனம் நோகும் அளவுக்கு
என் உடல் நாறும் அளவுக்கு,
குப்பைகூளங்களைப் போட்டு,
நீர் வளங்களை சாக்கடையாக்கி
என்னை நிரந்தர
நோயாளி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!
என் கண்ணீரை வற்றாத
ஜீவநதி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!

அன்னை நான் அழலாமா?
என்னை நீ அழ விடலாமா?