Tuesday, October 27, 2015

இவள் இல்லாமல்
நான் இல்லை.





இவள்தான் என் இனிய தோழி கருப்பழகி.  இவள் வயது ஏழரை.  


இவள் என்னுடன் இணைந்தது ஜனவரி 2008ல்.   இவள் பெயர் ஆனந்தா.  வருடங்கள் ஏழரை ஆனாலும் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறாள்.  அழகாக இருக்கிறாள்.  அவளுக்கு இட்ட வேலைகளை அருமையாக செய்கிறாள்.  இவளுக்கு அப்புறம் என்னை வந்து இணைந்தவர்கள் கூட (அதான் ‘மனைவியை நேசிக்கறவங்க எப்படி வேண்டாம்ன்னு சொல்லுவாங்க’ன்னு விளம்பரப்படுத்துவாங்களே அவளே தான்)  சொதப்பறபோது இவள் மட்டும் எப்பொழுதும் கை கொடுக்கும் கையாகவே இருக்கிறாள். 


அப்படி என்ன அருமையான வேலைகள் என்று கேட்கிறீர்களா?


சாம்பாருக்குத் தேவையான பருப்பு வேக வைக்க, விதம், விதமான கூட்டுகள் செய்ய,

சாம்பார், ரசம், பொங்கல், உப்புமா, சூப், பாயசம், நவராத்திரிக்கு தினம், தினம் சுண்டலுக்கு தானியங்கள் வேக வைக்க,

ஆடிக்கூழ் தயாரிக்க, ஏன் வெண்ணை காய்ச்சக் கூட – இப்படி எந்த வேலை கொடுத்தாலும் மிக மிக அருமையாக, கன கச்சிதமாக செய்து முடித்துவிடுவாள்.



இவள் ஒரு நாளில் குறைந்தது மூன்று முதல் நான்கு முறையாவது என்னுடன் இணைந்து வேலை செய்கிறாள்.  இதுநாள் வரை ஒரு நாளும் இவள் வேலை நிறுத்தம் செய்ததே இல்லை.  சொதப்பியதும் இல்லை. 


நம்பினால், நம்புங்கள் இவளுக்கான ரப்பர் வளையம் (GASKET) இது வரை மொத்தம் மூன்றே மூன்றுதான் உபயோகித்திருக்கிறேன் இந்த ஏழரை வருடங்களில்.  அதிலும் ஒன்று என் அஜாக்கிரதையால் பிய்ந்து போயிற்று.



ஆனால் இவளுக்குப் பின் வந்த மற்றவர்களுக்காக நான் மாற்றிய ரப்பர் வளையங்களின் எண்ணிக்கை கணக்கே இல்லை.


இப்ப புரிந்ததா இவளை ஏன் என் இனிய தோழி என்று சொன்னேன் என்று.