Google+ Followers

Monday, July 28, 2014

ரமலான் வாழ்த்துக்கள்

இஸ்லாமியத் தோழர், தோழியர் அனைவருக்கும் உளம் கனிந்த, ரமலான் நல் வாழ்த்துக்கள்.  


உலகில் அமைதி தவழ இந்நன்னாளில் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

அண்ணா வீடு எங்கே, இன்னும் கொஞ்சம் தூரம்


புது மணத் தம்பதிகள் (எங்கள் மகள், மருமகன்) கோபு அண்ணா வீட்டில் 

நான், என் கணவர் மற்றும் சம்பந்தி 


அண்ணாவின் பரிசாக அவர் எழுதிய புத்தகங்கள்


அண்ணாவின் பரிசு ரூபாய் விசிறியை எங்கள் மாப்பிள்ளை ரசித்துப்பார்க்கிறார்.அண்ணாவின் அன்புப்பரிசு எங்களுக்கு ஒன்று, புது மணத்தம்பதிகளுக்கு ஒன்று.


மகளின் திருமணம் முடிந்ததும், சம்பந்தி வீட்டில் குலதெய்வ வழிபாட்டிற்காக செல்ல வேண்டும் என்று அவர்களே ப்ரொக்ராம் போட்டு எங்களுக்கும் சேர்த்து (எனக்கும், என் கணவருக்கும்) டிக்கெட்டும் புக் செய்திருந்தார்கள்.  முதலில் திருச்சி, அங்கே நொச்சியத்தில் உருவாகிக் கொண்டிருந்த மகா பெரியவா ஆலயம், இளையாற்றன்குடியில் உள்ள மாங்கல்யேஸ்வரர் கோவில், பிறகு அங்கிருந்து கன்னியாகுமரி, அங்கிருந்து நாங்குநேரியில் உள்ள அவர்களின் குல தெய்வ வழிபாடு, பின் சென்னை திரும்புதல்.


திருச்சி என்றவுடன் எனக்கு ஒரு ஆசை.  கோபு அண்ணா வீட்டிற்குச் சென்று அவரைப் பார்க்க வேண்டும் என்று.  அவர் உடல் நிலை சரியில்லாததால், சென்னைக்கு திருமணத்திற்கு வருவது சந்தேகம் தான். முயற்சி செய்கிறேன் என்று சொல்லி இருந்தார். நாங்கள் திருச்சியில் தங்கியதோ அரை நாள்.  விடியற்காலையில் திருச்சி சென்றடைந்தோம்.  இதற்கிடையே BSNL TRICHYல் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு பாலசுப்பிரமணியம் அவர்களுடன் சந்திப்பு.  அவரே நாங்கள் தங்குமிடத்திற்கு வந்து எங்களை சந்தித்தார்.  இத்தனைக்கும் நடுவில் கோபு அண்ணா வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை, நேரம் இருக்குமா தெரியவில்லை.  ஆனால் முதல் நாளே அண்ணாவிடம் தெரியாததுபோல் பேசி விலாசம் வாங்கிக் கொண்டேன்.  நைசாக சம்பந்தி மாமாவிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் “அதற்கென்ன தாராளமாகப் போகலாமே” என்று சொல்லிவிட்டார்.


திரு பாலசுப்பிரமணியம் அவர்களை சந்தித்தபின் நொச்சியத்திற்குச் சென்றோம். அங்கு திருமதி ராஜலட்சுமி அவர்களை சந்தித்து விட்டு பாதி கட்டிய நிலையில் இருந்த கோவிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து இளையாற்றன் குடி மாங்கல்யீஸ்வரர் கோவிலில் இருந்து வெளியே வரும் போதே மணி 1145 ஆகிவிட்டது.   அங்கிருந்து நேரே கோபு அண்ணா வீட்டிற்குச் செல்லும் போதே மணி 1220 ஆகிவிட்டது.  மதியம் ஒரு மணிக்கு திருநெல்வேலி செல்ல ரயிலை புடிக்க வேண்டும்.  சம்பந்தி ரெயில்வேயில் பணி புரிவதால் செல்போனில் தொடர்பு கொண்டதில் ரயில் அரை மணி தாமதாமாக வருகிறது என்று சொன்னார்.  எனக்கும் என் கணவருக்கும் (சஷ்டியப்த பூர்த்தி முடிந்து அப்பொழுதுதான் அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறோமாம்) மற்றும் புது மணத் தம்பதிகளுக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் கோபு அண்ணாவும், மன்னியும்.  ஜாடிக்கு ஏத்த மூடி என்பார்கள்.  அது போல் அண்ணாவிற்கு ஏத்த மன்னி.  மன்னியின் அந்தப் புன்னகை, இன்னும் மறக்க முடியவில்லை. 

அண்ணா வீட்டில் தயாராக ஸ்வீட், கூல்ட்ரிங்ஸ், சிப்ஸ் etc. etc.  வைத்திருந்தார்கள்.   போட்டோ எடுக்கக்கூட நேரம் இல்லை.  அவசர அடி சந்திப்பு.  கூல் ட்ரிங்ஸை குடித்து விட்டு அண்ணாவின் பரிசாக அவர் எழுதிய புத்தகங்கள், மற்றும் ரூபாய் விசிறி, வெற்றிலை, பாக்கு, பழம்  etc. etc.  வைத்துக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். சிப்ஸ் வகையறாக்களையும் கட்டி எங்களுக்கு கொடுத்து அனுப்பினார்.  அண்ணா, மன்னியின் கால்களில் நான், என் கணவர், புது மணத் தம்பதிகள் விழுந்து நமஸ்கரித்து அவர்களின் வாழ்த்துக்களை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.  ரயில் நிலையத்திற்கு வந்து சேருவதற்கு முன்பே அண்ணாவிடம் இருந்து போன்.  நாங்கள் கொடுத்த கல்யாண முறுக்கு, அதிரசம் எல்லாம் ரொம்ப அருமையாக இருந்தது என்று.  ரசித்து எழுதுவது போல், சாப்பிடுவதிலும் அவர் ஒரு ரசிகர்.   அவர் வீட்டு ஜன்னலில் இருந்து மலைக்கோட்டையை பார்த்து ரசித்தோம்.  ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்வார்கள்.  தினமும் காலை எழுந்ததும் மலைக்கோட்டையை தரிசிக்கும் பேறு பெற்ற கோபு அண்ணா ரொம்ப கொடுத்து வைத்தவர்.

சிறிது நேரமே என்றாலும் மிகவும் நிறைவான சந்திப்பு.  அனைவர் மனதிலும் இன்றும் பசுமையான இனிக்கும் நினைவுகள்.   என் மகள் சொல்லி, சொல்லி மகிழ்கிறாள் ‘அம்மா, உனக்கு என்ன ஒரு அருமையான மனிதர் என்று. 

கோபு அண்ணாவுடன் நேரே நிறையப் பேச வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை நிறைவேறா விட்டாலும் அவரை சந்திக்கவாவது செய்தோமே என்று மனதை தேற்றிக் கொண்டேன்.   இறைவன் அருள் இருந்தால் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் என்றும் என்னை நானே தேற்றிக் கொண்டேன்.