Google+ Followers

Monday, November 9, 2015

பிறந்த வீட்டு சீதனம் – பகுதி 1.
கோபு அண்ணாவிடமிருந்து சீதனம் பெறுவது எனக்கொன்றும் புதிதல்ல.  என் பிறந்த நாளுக்கு, எங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கு, ஏன் போனசாக என் மகள் கல்யாணத்திற்கு, என் பேத்தியின் பிறந்த நாளுக்கு என்று பலமுறை பெற்றிருக்கிறேன்.

ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமான சீதனம்.   தீபாவளிக்கு பிறந்தவீட்டு சீதனம்.

 


இந்த ரூபாய் நோட்டுக்கள எப்படி எடுக்கணும்ன்னு எனக்கு அனுப்பின மின்னஞ்சல்ல சொல்லி இருந்தார் கோபு அண்ணா.  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இதை பிரிக்கவே போறதில்லை.  என் கைக்கு எப்படி வந்து சேர்ந்ததோ அப்படியே வைத்திருப்பேன்.

சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறும் வாய்ப்பை கோட்டைவிட்ட எனக்கு (அலுவலக வேலை, வீட்டு வேலை, பெண்ணின் கல்யாணம், பேத்தியின் ஆக்கிரமிப்பு – பேத்திதான் எங்கள் நேரம், மனது எல்லாவற்றையும் மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டாளே) ஆறுதலாக இந்த சுலபமான 
பின்னூட்டப் போட்டி.   

ஆனால் ஒன்று. இந்தப் போட்டி அறிவிப்பிற்கு முன்பே நான் கோபு அண்ணாவிடம், “நீங்கள் என் வலைத்தளத்திற்கு வருகை தந்து ஒவ்வொரு பதிவுக்கும் (ஆமாம் மொத்தப்பதிவுகளே தம்மாத்தூண்டுதான்) பின்னூட்டம் கொடுத்துள்ளது போல் நானும் உங்கள் வலைத் தளத்திற்கு வந்து எல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ (கொஞ்சமா, நஞ்சமா, அம்மாஆஆஆஆடி எழுநூத்தி ஐம்பது) பதிவுகளுக்கும் கண்டிப்பா பின்னூட்டம் கொடுத்துடறேன்’னு உதார் விட்டேன்.   ஆனா இதை முடிக்க நான் பட்ட பாடு.   எப்படியோ உருண்டு, பெரண்டு முடிச்சுட்டேன். 

சக பதிவர்களை கௌரவிப்பதிலும், ஊக்குவிப்பதிலும் கோபு அண்ணாவிற்கு இணை அவரே தான்.  அப்படிப்பட்ட கோபு அண்ணாவிடமிருந்து இந்தப் பரிசு பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.   ஆமாம். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டுப்படணும் இல்லையா?

சாதனையாளர் விருது  

 

இதைப் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது.  

 750 பதிவுகள், பலப்பல பரிசுகள் இவர் பெற்றதும் இல்லாம விமர்சகர்களுக்கும் தாராளமா வழங்கி,   

ஆனா இவர் வலைத் தளத்துல 

”சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்”

 அப்படீன்னு போட்டுப்பாராம்.

ஆனால் எனக்கு சாதனையாளர் விருதுன்னு போடுவாராம்.    

சிரிப்புத்தான் வருகுதைய்யா

பாருங்க.  என் வலைத் தளத்தின் முகவரிகளை அழகா கொடுத்திருக்கார்.  இதை கண்டிப்பா இவர் வலைத் தளத்தில் போடுவார்.  அதற்கு பின்னூட்டங்களோ நூத்துக் கணக்குல வரும்.  இதுல கொஞ்சம் பேராவது என் வலைத் தளம் பக்கம் வந்து எட்டிப் பார்ப்பாங்க.   இது தீவாளி போனசு. 

...............தொடரும்

Tuesday, October 27, 2015

இவள் இல்லாமல்
நான் இல்லை.

இவள்தான் என் இனிய தோழி கருப்பழகி.  இவள் வயது ஏழரை.  


இவள் என்னுடன் இணைந்தது ஜனவரி 2008ல்.   இவள் பெயர் ஆனந்தா.  வருடங்கள் ஏழரை ஆனாலும் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறாள்.  அழகாக இருக்கிறாள்.  அவளுக்கு இட்ட வேலைகளை அருமையாக செய்கிறாள்.  இவளுக்கு அப்புறம் என்னை வந்து இணைந்தவர்கள் கூட (அதான் ‘மனைவியை நேசிக்கறவங்க எப்படி வேண்டாம்ன்னு சொல்லுவாங்க’ன்னு விளம்பரப்படுத்துவாங்களே அவளே தான்)  சொதப்பறபோது இவள் மட்டும் எப்பொழுதும் கை கொடுக்கும் கையாகவே இருக்கிறாள். 


அப்படி என்ன அருமையான வேலைகள் என்று கேட்கிறீர்களா?


சாம்பாருக்குத் தேவையான பருப்பு வேக வைக்க, விதம், விதமான கூட்டுகள் செய்ய,

சாம்பார், ரசம், பொங்கல், உப்புமா, சூப், பாயசம், நவராத்திரிக்கு தினம், தினம் சுண்டலுக்கு தானியங்கள் வேக வைக்க,

ஆடிக்கூழ் தயாரிக்க, ஏன் வெண்ணை காய்ச்சக் கூட – இப்படி எந்த வேலை கொடுத்தாலும் மிக மிக அருமையாக, கன கச்சிதமாக செய்து முடித்துவிடுவாள்.இவள் ஒரு நாளில் குறைந்தது மூன்று முதல் நான்கு முறையாவது என்னுடன் இணைந்து வேலை செய்கிறாள்.  இதுநாள் வரை ஒரு நாளும் இவள் வேலை நிறுத்தம் செய்ததே இல்லை.  சொதப்பியதும் இல்லை. 


நம்பினால், நம்புங்கள் இவளுக்கான ரப்பர் வளையம் (GASKET) இது வரை மொத்தம் மூன்றே மூன்றுதான் உபயோகித்திருக்கிறேன் இந்த ஏழரை வருடங்களில்.  அதிலும் ஒன்று என் அஜாக்கிரதையால் பிய்ந்து போயிற்று.ஆனால் இவளுக்குப் பின் வந்த மற்றவர்களுக்காக நான் மாற்றிய ரப்பர் வளையங்களின் எண்ணிக்கை கணக்கே இல்லை.


இப்ப புரிந்ததா இவளை ஏன் என் இனிய தோழி என்று சொன்னேன் என்று.


Sunday, June 21, 2015

60 முடிந்தது அருமையாக.

நன்றி என்று ஒற்றைச் சொல்லாக சொல்லி முடிக்க முடியாது.   முகப் புத்தகத்திலும், கைப்பேசி செய்தியிலும், தொலை பேசியிலும் என் அறுபதாவது பிறந்த நாளுக்கு (29.05.2015) வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றி.
என்னுடைய 60வது பிறந்த நாளுக்கு என் கணவரின் அன்புப் பரிசு.

 

என் மகன், மகள், மருமகள், மருமகன், லயாக்குட்டி எல்லாரும் சேர்ந்து பரிசளித்த தங்க மோதிரம்

 என் அம்மா கொடுத்த 500 ரூபாய்க்கு (கண்டிப்பாக ஏதாவது வாங்கிக் கொள் என்ற அன்புக் கட்டளைக்கேற்ப) நான் வாங்கிக்கொண்ட இரண்டு பருத்திப் புடவைகள்.

 

 பக்கத்து வீட்டு உமா (நான் மிகவும் மதிக்கும், நேசிக்கும் பெண்மணி) அளித்த அன்புப் பரிசு.

 

 மாமியார் கொடுத்த 100 ரூபாயை அப்படியே வைத்திருக்கிறேன்.

இது எல்லாவற்றையும் விட எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லாத ஒரு பரிசு எங்கள் பேத்தி லயாக்குட்டியின் அன்பு முத்தங்கள்.  நான் அவளிடம் எனக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசிலேயே மிகச் சிறந்தது அவளின் முத்தங்கள் தான் என்று சொன்னேன். அன்று முழுவதும் அவள் ஐந்து நிமிடங்களுக்கொரு முறை ‘பாட்டி, உனக்கு எது BEST GIFT’  என்று கேட்டாள்.  ‘உன் முத்தங்கள்தான்’ என்று சொன்னதும் ரசித்து, ரசித்து சிரித்தாள்.இதை விட என்ன பெரியதொரு பரிசு இருக்கப் போகிறது.  

 GOD IS SO GREAT


60 முடிந்து 61ல் மகிழ்ச்சியாகக் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் உங்கள் அன்பான வாழ்த்துக்களுடன்.Monday, April 13, 2015

மன்மத ஆண்டே வருக வருகஇந்த தமிழ்ப் புத்தாண்டு எனக்கு ஒரு மிகவும் சிறப்பான ஆண்டாகும்.
இருக்காதா பின்னே. அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் அவதரித்த (!!!) ஆண்டாயிற்றே. ஆக இந்த மன்மத ஆண்டு வைகாசி மாதம் 12 ம் நாள் பூர நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் (26.05.2015) எனக்கு அகவை 60 முடிந்து 61 தொடங்கப் போகிறது. இப்ப சொல்லுங்க இந்த மன்மத வருடம் எனக்கு ரொம்ப சிறப்பானதுதானே.


இந்தப் புத்தாண்டை ஆவலுடனும், ஆர்வத்துடனும், எனது புத்தாண்டு கவிதையுடனும், வருக வருக என்று வரவேற்கிறேன்.


மீள் பதிவு.

புத்தாண்டு பிறக்குது

புத்தாண்டு பிறக்குது

முத்தான கோரிக்கைகள்

முன்னே வைக்கின்றேன்

முடிந்தால் நிறைவேற்றிடு

முழு முதற் கடவுளே – முடிந்தால்

முழுவதும் நிறைவேற்றிவிடு.
மொழிச்சண்டை,

இனச்சண்டை,

மதச்சண்டை,

ஜாதிச்சண்டை,

அண்டை, அயல் நாட்டுச் சண்டை

எல்லா சண்டைகளையும்

அறவே ஒழித்திடு.கொலை, களவு, கற்பழிப்பு,

நரபலி, தீண்டாமை,

நம்பிக்கைத் துரோகம், தீவிரவாதம்

நச்சென்று நசுக்கி

நலம் கெட்டுப்போகவை.
நீ கொடுத்த இன்னுயிரை

தானே அழிக்கும்

தரங்கெட்ட செயலை

தப்பாமல் மாற்றிடு.பிறர் பொருள்,

பிறர் மனை கவரும்

பேராசையை

கட்டாயம் விரட்டி விடு.பிச்சையில்லா பாரதம்

நிச்சயம் உருவாக்கிடு

உழைப்பின் உயர்வு,

உயிரின் விலை,

பாரம்பரியம்,

நல்ல பழக்க வழக்கங்கள்

புரியாதவர்களுக்குப்

புரிய வைத்திடு.முட்டாள் மனிதனை

மூளைச் சலவை செய்தாவது

முடிந்தவரை நிறைவேற்றிடு.