Showing posts with label என் எண்ணங்கள். Show all posts
Showing posts with label என் எண்ணங்கள். Show all posts

Monday, May 1, 2017



குல தெய்வம்


என்னடா இவ, குலதெய்வம்ன்னு தலைப்பை போட்டுட்டு  TYPEWRITERபடத்தை போட்டு இருக்காளேன்னு யோசிக்கிறீங்களா?  முழுக்க படியுங்க.  படிச்சுட்டு சொல்லுங்க.


24.12.2012 அன்னிக்கு கார்த்தால 0715 மணிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சேன்னு நன்மங்கலம் நீல வர்ணப் பெருமாளை தரிசனம் பண்ண நன்மங்கலம் ரோட்டில் திரும்பி ஒரு பத்தடிதான் நடந்திருப்பேன்.  இளையராஜா / ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை மாதிரி என் காதுல டைப் அடிக்கற ஓசை கேட்டுது.  நிமிர்ந்து பார்த்தா ‘VINOD TECHNICAL INSTITUTE’.  ஆஹா, இந்த இன்னிசையைக் கேட்டு எவ்வளவு நாள், ஏன் வருஷமே ஆச்சு.  ஆமாம் இப்ப COMPUTERல தான டைப் அடிக்கறோம். சத்தமே கேக்காதே, FEATHER TOUCH.  




செய்தித்தாள்களில் 2011ஆம் ஆண்டு வந்த இந்த செய்தியைப் படித்தபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர்
மும்பை : உலகின் கடைசி டைப்ரைட்டிங் நிறுவனமான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்,மும்பையில் உள்ள தனது உற்பத்தி யூனிட்டை மூடியுள்ளது. உலகம் முழுவதும் ஒருகாலத்தில்அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட டைப்ரைட்டிங்,கம்ப்யூட்டர் வருகையால் கணிசமாக குறைந்தது. மேற்கத்திய நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன்பேதட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நி‌லையில்சமீபகாலமாகடைப்ரைட்டிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தட்டச்சு பயன்பாடு குறைந்து,கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்துடைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டன. ஆனாலும்கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம்,டைப்ரைட்டிங் மிசின்களை தயாரித்து வந்தது. உலகின் கடைசி டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ‌கோத்ரெஜ் அண்ட் போய்ஸ் நிறுவனம்அதனை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுகுறித்துஇதன் உயர் அதிகாரி மிலிந்த் துக்லே கூறியதாவது,கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரித்து விட்டதால்இதன் பயன்பாடு குறைந்து விட்டது. பயன்பாடு குறைந்ததால்தங்களுக்கு வரும் ஆர்டர்களும் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போதுதங்களிடம் 200 டைப்ரைட்டிங் மெசின்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இவையும் அரபுமொழி டைப்ரைட்டிங் மெசின்களே ஆகும் என்றும்இதனையடுத்து வேறவழியின்றி உற்பத்தி யூனிட்டை மூடிவிட்டதாக அவர் தெரிவித்தார்.




கோத்ரெஜ் கம்பெனியின் டைப்ரைட்டர் பிரிவு 1955ல் (நான் அவதரித்த ஆண்டாக்கும்) தொடங்கப்பட்டது இந்தியாவின் சுதந்திரத்துக்கும் தொழில்மயத்துக்கும் டைப்ரைட்டர் ஓர் அடையாளம் என்று பிரதமர் நேரு புகழாரம் சூட்டினார்.



ஆனால் சத்திரத்துத் திண்ணையில் படுத்திருந்த நாயை விரட்டி விட்டு மனிதன் ஆக்ரமித்துக் கொள்வது போல் டைப்ரைட்டரை விரட்டி விட்டு அலுவலகம், வீடு, தொழிற்சாலைகள் என்று எல்லா இடங்களையும் கம்ப்யூட்டர் ஆக்கிரமித்துக் கொண்டது.  போர்ட்டபிள் டைப்ரைட்டர்களின் இடத்தை லேப்டாப் பிடிங்கிக் கொண்டது. 


பிரதமர் நேரு சொன்ன அடையாளத்தை அடையாளமே இல்லாமல் அழிக்கத் தொடங்கியது கம்ப்யூட்டர்.







நாங்க படிச்ச காலத்துல எல்லாம் SSLC முடிச்சதும், ஏன் பத்தாவது முடிஞ்ச லீவுலயே TYPEWRITING CLASS சேர்த்துடுவாங்க.  விருப்பம் இருந்தால் அப்படியே சுருக்கெழுத்தும்.  எத்தனையோ குடும்பங்கள்ள விளக்கேத்தி வெச்சிருக்கு இந்த TYPEWRITING & SHORTHAND இரண்டும்.



நான் GOVERNMENT POLYTECHNIC FOR WOMENல் (தற்போதைய பெயர்DHARMAMBAL POLYTECHNIC) மூன்று வருட DIPLOMA IN COMMERCIAL PRACTICE COURSE 1970 – 1973 படித்தேன்.  அதில் B.COM SUBJECTS மற்றும் ENGLISH TYPEWRITING, SHORTHAND HIGHER.  


அதே நேரத்தில் என் COUSIN கோவையில் இதே COURSE  இரண்டு ஆண்டுகள் படித்து கோவை SUGARCANE BREEDING INSTITUTE ல் பணியில் சேர்ந்திருந்தார்.  அதனால்தான் என் அம்மா நீயும் இதேDIPLOMA படி, கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.  முதல் வருடம் காலேஜ் போகவில்லையே என்று வருத்தம் கொஞ்சம் இருந்தது.  இரண்டாம் வருடம் வருத்தத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.  



3 வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த உடனே நல்ல அரசாங்க வேலை.  ஆயிற்று 39 வருடங்கள் 3 மாதங்கள் பணியாற்றிவிட்டாகிவிட்டது.  இன்னும் பாக்கி இருப்பது 1 வருடம் 5 மாதம்.

இதே குலதெய்வம் தான் சமூக அந்தஸ்தைக் கொடுத்தது, பலரின் பாராட்டையும் பெற்று கொடுத்தது. 



இப்பதானே கம்ப்யூட்டர் ஜாலம் எல்லாம்.

டைப்ரைட்டரில் ஒரு W, அதுக்கு மேல ஒரு &,  அந்த மேல ஒரு /, ஒரு SOLDIER மாதிரி வரும். 

அப்புறம் ஒரு தேர் மாதிரி டிசைன் செய்தது.   சின்னச் சின்ன விஷயங்கள்.  எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அந்தக் காலத்துல என் அப்பா ஒரு கடிதத்தை சிவலிங்கம் மாதிரி அடித்திருப்பார். 


 ஆனா ஒண்ணுங்க. இந்த செய்தியையும் கேளுங்க.
ரொம்ப அலட்டிக்காத கம்ப்யூட்டரே.

மிசோரம் மாநிலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுவதால்அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு,டைப்ரைட்டிங் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.



யார் கண்டது, மீண்டும் பழைய டைப்ரைட்டர்களுக்கு பூரண கும்ப வரவேற்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். 



என்னை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற ‘VINOD TECHNICAL INSTITUTE’க்கு நன்றி.
 இப்ப சொல்லுங்க, எனக்கு, என் குடும்பத்துக்கு, ஏன் எத்தனையோ குடும்பங்களுக்கு இந்த TYPEWRITER (அதோட மவுசு குறைந்தாலும்) குலதெய்வம் தானே.

மீள் பதிவு

Monday, November 9, 2015

பிறந்த வீட்டு சீதனம் – பகுதி 1.




கோபு அண்ணாவிடமிருந்து சீதனம் பெறுவது எனக்கொன்றும் புதிதல்ல.  என் பிறந்த நாளுக்கு, எங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கு, ஏன் போனசாக என் மகள் கல்யாணத்திற்கு, என் பேத்தியின் பிறந்த நாளுக்கு என்று பலமுறை பெற்றிருக்கிறேன்.

ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமான சீதனம்.   தீபாவளிக்கு பிறந்தவீட்டு சீதனம்.

 


இந்த ரூபாய் நோட்டுக்கள எப்படி எடுக்கணும்ன்னு எனக்கு அனுப்பின மின்னஞ்சல்ல சொல்லி இருந்தார் கோபு அண்ணா.  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இதை பிரிக்கவே போறதில்லை.  என் கைக்கு எப்படி வந்து சேர்ந்ததோ அப்படியே வைத்திருப்பேன்.

சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறும் வாய்ப்பை கோட்டைவிட்ட எனக்கு (அலுவலக வேலை, வீட்டு வேலை, பெண்ணின் கல்யாணம், பேத்தியின் ஆக்கிரமிப்பு – பேத்திதான் எங்கள் நேரம், மனது எல்லாவற்றையும் மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டாளே) ஆறுதலாக இந்த சுலபமான 
பின்னூட்டப் போட்டி.   

ஆனால் ஒன்று. இந்தப் போட்டி அறிவிப்பிற்கு முன்பே நான் கோபு அண்ணாவிடம், “நீங்கள் என் வலைத்தளத்திற்கு வருகை தந்து ஒவ்வொரு பதிவுக்கும் (ஆமாம் மொத்தப்பதிவுகளே தம்மாத்தூண்டுதான்) பின்னூட்டம் கொடுத்துள்ளது போல் நானும் உங்கள் வலைத் தளத்திற்கு வந்து எல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ (கொஞ்சமா, நஞ்சமா, அம்மாஆஆஆஆடி எழுநூத்தி ஐம்பது) பதிவுகளுக்கும் கண்டிப்பா பின்னூட்டம் கொடுத்துடறேன்’னு உதார் விட்டேன்.   ஆனா இதை முடிக்க நான் பட்ட பாடு.   எப்படியோ உருண்டு, பெரண்டு முடிச்சுட்டேன். 

சக பதிவர்களை கௌரவிப்பதிலும், ஊக்குவிப்பதிலும் கோபு அண்ணாவிற்கு இணை அவரே தான்.  அப்படிப்பட்ட கோபு அண்ணாவிடமிருந்து இந்தப் பரிசு பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.   ஆமாம். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டுப்படணும் இல்லையா?

சாதனையாளர் விருது  

 

இதைப் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது.  

 750 பதிவுகள், பலப்பல பரிசுகள் இவர் பெற்றதும் இல்லாம விமர்சகர்களுக்கும் தாராளமா வழங்கி,   

ஆனா இவர் வலைத் தளத்துல 

”சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்”

 அப்படீன்னு போட்டுப்பாராம்.

ஆனால் எனக்கு சாதனையாளர் விருதுன்னு போடுவாராம்.    

சிரிப்புத்தான் வருகுதைய்யா





பாருங்க.  என் வலைத் தளத்தின் முகவரிகளை அழகா கொடுத்திருக்கார்.  இதை கண்டிப்பா இவர் வலைத் தளத்தில் போடுவார்.  அதற்கு பின்னூட்டங்களோ நூத்துக் கணக்குல வரும்.  இதுல கொஞ்சம் பேராவது என் வலைத் தளம் பக்கம் வந்து எட்டிப் பார்ப்பாங்க.   இது தீவாளி போனசு. 

...............தொடரும்

Tuesday, October 27, 2015

இவள் இல்லாமல்
நான் இல்லை.





இவள்தான் என் இனிய தோழி கருப்பழகி.  இவள் வயது ஏழரை.  


இவள் என்னுடன் இணைந்தது ஜனவரி 2008ல்.   இவள் பெயர் ஆனந்தா.  வருடங்கள் ஏழரை ஆனாலும் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறாள்.  அழகாக இருக்கிறாள்.  அவளுக்கு இட்ட வேலைகளை அருமையாக செய்கிறாள்.  இவளுக்கு அப்புறம் என்னை வந்து இணைந்தவர்கள் கூட (அதான் ‘மனைவியை நேசிக்கறவங்க எப்படி வேண்டாம்ன்னு சொல்லுவாங்க’ன்னு விளம்பரப்படுத்துவாங்களே அவளே தான்)  சொதப்பறபோது இவள் மட்டும் எப்பொழுதும் கை கொடுக்கும் கையாகவே இருக்கிறாள். 


அப்படி என்ன அருமையான வேலைகள் என்று கேட்கிறீர்களா?


சாம்பாருக்குத் தேவையான பருப்பு வேக வைக்க, விதம், விதமான கூட்டுகள் செய்ய,

சாம்பார், ரசம், பொங்கல், உப்புமா, சூப், பாயசம், நவராத்திரிக்கு தினம், தினம் சுண்டலுக்கு தானியங்கள் வேக வைக்க,

ஆடிக்கூழ் தயாரிக்க, ஏன் வெண்ணை காய்ச்சக் கூட – இப்படி எந்த வேலை கொடுத்தாலும் மிக மிக அருமையாக, கன கச்சிதமாக செய்து முடித்துவிடுவாள்.



இவள் ஒரு நாளில் குறைந்தது மூன்று முதல் நான்கு முறையாவது என்னுடன் இணைந்து வேலை செய்கிறாள்.  இதுநாள் வரை ஒரு நாளும் இவள் வேலை நிறுத்தம் செய்ததே இல்லை.  சொதப்பியதும் இல்லை. 


நம்பினால், நம்புங்கள் இவளுக்கான ரப்பர் வளையம் (GASKET) இது வரை மொத்தம் மூன்றே மூன்றுதான் உபயோகித்திருக்கிறேன் இந்த ஏழரை வருடங்களில்.  அதிலும் ஒன்று என் அஜாக்கிரதையால் பிய்ந்து போயிற்று.



ஆனால் இவளுக்குப் பின் வந்த மற்றவர்களுக்காக நான் மாற்றிய ரப்பர் வளையங்களின் எண்ணிக்கை கணக்கே இல்லை.


இப்ப புரிந்ததா இவளை ஏன் என் இனிய தோழி என்று சொன்னேன் என்று.


Tuesday, January 13, 2015


போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்.




உங்கள் இல்லத்தை 
தூய்மைப் படுத்தி, 
உலகத்தை மாசு படுத்தாதீர்கள்.



இல்லத்துடன்
உள்ளத்தையும்
தூய்மைப் படுத்தி
மாசில்லா உலகத்தை
உருவாக்குங்கள்.


Wednesday, August 13, 2014

தோழிகள் இணைந்தனர்.


இன்று திடீரென்று என்னுடன் www.arusuvai.com ல் இணைந்திருந்த தோழி திருமதி மாலதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கும் திருமதி அனுராதா (இவர் என்னுடன் ஒன்றாக பணி புரிந்தவரும் கூட) தன்னுடன் படித்தவர் போல் இருப்பதாகவும், முடிந்தால் விசாரித்து சொல்ல முடியுமா என்றும் கேட்டார்.  அவர் சொன்ன அடையாளங்களை சொல்லி விசாரித்தால் சாட்சாத் நான் மாலதியுடன் பள்ளியில் படித்த அதே அனுராதாதான் என்றார். மாலதியின் தொலைபேசி எண்களை அனுராதாவிற்கும், அனுராதாவின் தொலைபேசி எண்ணை மாலதிக்கும்  SMS  செய்து விட்டேன்.  கிட்டத்தட்ட 30, 35 ஆண்டுகளுக்குப் பிறகு இரு தோழிகள் இணைவதற்கு நான் ஒரு கருவியாக இருந்ததற்கு மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க நட்பு!.