Saturday, April 22, 2017


இன்று சர்வ தேச பூமி தினம் கடை பிடிக்கப்படுகிறதாம். 

பூமித்தாயின் சார்பில் இந்த கவிதையை உங்கள் முன் வைக்கிறேன். 

IN AND OUT CHENNAI DEC 16 - 31 இதழில் வெளிவந்த என் கவிதை.  இங்கு உங்களுக்காக மீண்டும் பதிந்துள்ளேன்.



ஏர் கொண்டு உழுதாய்
விதை விதைத்தாய்
களை எடுத்தாய்
கதிர் அறுத்தாய்
போரடித்தாய்
வலிபல பொறுத்தேன்
வையத்து மக்கள்
பசி பிணி போக்கத்தானே,
வாய் வாழ்த்தாவிட்டாலும்
வயிறு வாழ்த்துமே என்று
வாளாதிருந்தேன்.

என்னை வெட்டிக் குழைத்து
மண்பாண்டம் செய்தாய்
பாவம் பிழைக்கத்தானே என்று
பேசாதிருந்தேன்
சோறு சமைக்கத்தானே என்று
சோகத்தை மறைத்திருந்தேன்
அகல் விளக்காக்கி அகமகிழ்ந்தாய்
இருள் நீக்கி ஒளியேற்றத்தானே
என்று அமைதியாய் இருந்தேன்
பலப்பல கனிமங்களை உனக்கு
வாரி வழங்கி உன் வாழ்க்கையை
வளமாக்கினேன்.

ஏரிகளையும்நீர் நிலைகளை தூர்த்தும்
வயல்வெளிகளை அழித்தும்
மாட மாளிகைகளையும்,
கூட கோபுரங்களையும் கட்டி
என் மேல் பாரத்தை ஏற்றினாய்.
என்னை அழகாக்கி
நீயும் மகிழ்கிறாய் என்று
பகல் கனவு கண்டிருந்தேன்.


ஆனால்
என் தோல் சுருங்கும் அளவுக்கு,
என் முகம் வாடும் அளவுக்கு
என் மனம் நோகும் அளவுக்கு
என் உடல் நாறும் அளவுக்கு,
குப்பைகூளங்களைப் போட்டு,
நீர் வளங்களை சாக்கடையாக்கி
என்னை நிரந்தர
நோயாளி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!
என் கண்ணீரை வற்றாத
ஜீவநதி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!

அன்னை நான் அழலாமா?
என்னை நீ அழ விடலாமா?

6 comments:

  1. அழகான கவிதை. ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்? விரைவில் தொடங்குங்கள். நல்ல எழுத்துக்களைத் தேடித் படிக்கும் ஒரு கூட்டம் இணையத்தில் இருப்பதை மறக்கலாமா?

    -இராய செல்லப்பா நியூஜெர்சி
    http://ChellappaTamilDiary.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      தற்காலிக நிறுத்தம் தான். வீட்டில் இரண்டு குட்டி பேத்திகள் (4 வயது, 1 வயது) இருப்பதால் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது.

      இப்படி ஊக்குவிக்க ஆட்கள் இருக்கும்போது................ ம் தொடங்கி விடுகிறேன்.

      மீண்டும் நன்றி.

      Delete
  2. உள்ளது உள்ளபடி கவிதை அமைந்துள்ளது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாட்சி அம்மா
      உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      நேபாளம் சென்றுவிட்டு வந்தேன். அங்கு உங்களை நினைத்துக் கொண்டேன். போவதற்கு முன் உங்கள் வலைப்பதிவில் படித்தேன்.

      Delete
  3. மிகவும் அருமையான + நியாயமான கவிதை.

    ஒவ்வொரு வரியை நன்கு யோசித்து அனுபவித்து எழுதியுள்ள தாங்களே என் பார்வையில் ’பொறுமையில் பூமாதேவி’யாக்கும்.

    இதுபோல எத்தனை எத்தனை படைப்பாற்றல் திறமைகளை உங்களிடம் ஒளித்து வைத்துள்ளீர்களோ? வியந்து போகிறேன்.

    ஒவ்வொன்றாக எடுத்து வெளியே விடுங்கோ. இந்த பதிவுலக பூமி தாங்கிக்கொள்ளும். :)

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான நல்வாழ்த்துகள். அசத்தலான இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள், ஜெயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி கோபு அண்ணா

      //ஒவ்வொரு வரியை நன்கு யோசித்து அனுபவித்து எழுதியுள்ள தாங்களே என் பார்வையில் ’பொறுமையில் பூமாதேவி’யாக்கும். //

      மிகையாக இருந்தாலும் ரசிக்கிறேன்.

      //இதுபோல எத்தனை எத்தனை படைப்பாற்றல் திறமைகளை உங்களிடம் ஒளித்து வைத்துள்ளீர்களோ? வியந்து போகிறேன்.

      ஒவ்வொன்றாக எடுத்து வெளியே விடுங்கோ. இந்த பதிவுலக பூமி தாங்கிக்கொள்ளும். :)//

      எல்லாம் உங்கள் ஆசிதான்.

      நான் தான் எப்பொழுதும் உங்களுக்கு நன்றி சொல்லும் நிலையில் இருக்கிறேன்.

      சிரம் தாழ்ந்த நன்றிகள்

      Delete