Showing posts with label என் கவிதைக் கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label என் கவிதைக் கிறுக்கல்கள். Show all posts

Wednesday, May 3, 2017

 பிள்ளையில்லா வீடு


சிறு பிள்ளையில்லா வீடு
வைத்தது வைத்த இடத்தில்

கொட்டிக் கவிழ்க்க ஒரு சுட்டி இல்லை

இட்ட கோலத்தை அழிக்க

ஒரு பிஞ்சுப் பாதம் இல்லை

இரு கை கொண்டு அள்ளி

சோற்றை வாரி இறைக்கவும் ஆளில்லை.

காது குளிர ம்மா, ப்பா,

தாத்தா, பாத்தி என்று
அழைக்கும் மழலைச் சொல்
கேட்கவே இல்லை.

ஆனால், எந்நேரமும் 

முழுச் சுத்தமாக
இருக்கும் வீடு 
எனக்கு தேவையே இல்லை.

இப்படி கலைந்த கோலமும், 

சின்னச் சின்ன சேட்டைகள் செய்யும்
பிள்ளைகள் இருக்கும் வீடுதான் 
என் விருப்பம்.

***
நேற்று மாலை மருமகள் போட்ட கண்ணன் காலடிகளை பேத்தி பூஜை முடிந்த சிறிது நேரத்திலே அழித்து விட்டாள். அப்பொழுது என் மகன் கேட்டான், “அம்மா! சில வருடங்களுக்கு முன் நம் வீட்டில் கண்ணன் பாதங்கள் எவ்வளவு நாட்கள் அழியாமல் இருக்கும்” என்று.
அப்பொழுது தோன்றியது இது.

மீள் பதிவு

Tuesday, May 2, 2017

வீடு

IN AND OUT CHENNAI JAN 16-31 ல் வெளி வந்த என் கவிதை ‘வீடு’.  உங்களுக்காக மீண்டும் இங்கு பதிகிறேன்

வீடு
வாசலிலே நிதம் பூத்து
இதமான மணம் பரப்பும்
நித்ய மல்லிக்கொடி,
வீட்டைச் சுற்றி மணம் நிறைந்த
நிறம் மிகுந்த மலர்ச் செடிகள்,
விசாலமான அறைகள்,
வீடு நிறைய மனிதர்கள்,
தாத்தாபாட்டிபெரியப்பாபெரியம்மா,
சித்திசித்தப்பாஅத்தைமாமா என்று,
கருவண்டு கண்கள் சுழற்றி
நொடிக்கொரு சேட்டை செய்யும்
குஞ்சு குளுவான்கள்,
புது மனிதர் வருகையை
கட்டியம் கூறும்
பைரவர் வாசலிலே,
கொல்லையிலே கல்கண்டுத் தண்ணீருடன்
எப்போதும் வற்றாத கிணறு,
மாபலாவாழை மரங்கள்,
தினத் தேவை பூர்த்தி செய்யும்
காய்கறிச் செடிகள்,
இப்படி என் பிறந்த வீடு போலவே
புகுந்த வீடும் இருக்கும்
என்ற கனவுகளுடன்
கை பிடித்த மணாளனுடன்
மகிழுந்திலிருந்து வலது கால் எடுத்து
நிலம் பதித்து புது வீடு
வந்து சேர்ந்தேன்.
ஒன்றல்லஇரண்டல்ல
எண்ணிலா புறாக்கூண்டுகள்
விருந்தினர் வருகையை
சூசகமாகத் தடுப்பது போல்  
ஒற்றைப் படுக்கையறை,
பக்கத்து வீட்டில் இருப்பது
யார் என்று தெரியவே
பல நாட்களாயிற்று.
வாசலில் வந்து பார்த்தாலும்,
சாளரத்தின் வழியே பார்த்தாலும்
கண்ணில் பட்டது சாத்திய கதவுகளே!
காய்கறி வண்டிக்காரன்,
விற்பனையாளன்,
அறிமுகம் இல்லாதவர்
அனைவருமே நிறுத்தப்பட்டனர்
வெளி வாசலிலேயே
பாதுகாப்பான இடம்
தண்ணீர் வசதி
எப்பொழுதும் மின்சாரம்
அன்பான கணவன்
இல்லை என்ற சொல்லுக்கே
இடமில்லாத ஒரு வாழ்க்கை
ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
அடியேநீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளி’ என்று.

Saturday, April 29, 2017






மலர்ப்படுக்கை








வாழ்க்கை ஒன்றும்

முழு மலர்ப் படுக்கை அல்ல


முள் குத்தாமல்

பார்த்துக் கொள்வதும்,


குத்தினால் பொறுத்துக்கொள்வதும்


நம் கையில் தான்

Saturday, April 22, 2017


இன்று சர்வ தேச பூமி தினம் கடை பிடிக்கப்படுகிறதாம். 

பூமித்தாயின் சார்பில் இந்த கவிதையை உங்கள் முன் வைக்கிறேன். 

IN AND OUT CHENNAI DEC 16 - 31 இதழில் வெளிவந்த என் கவிதை.  இங்கு உங்களுக்காக மீண்டும் பதிந்துள்ளேன்.



ஏர் கொண்டு உழுதாய்
விதை விதைத்தாய்
களை எடுத்தாய்
கதிர் அறுத்தாய்
போரடித்தாய்
வலிபல பொறுத்தேன்
வையத்து மக்கள்
பசி பிணி போக்கத்தானே,
வாய் வாழ்த்தாவிட்டாலும்
வயிறு வாழ்த்துமே என்று
வாளாதிருந்தேன்.

என்னை வெட்டிக் குழைத்து
மண்பாண்டம் செய்தாய்
பாவம் பிழைக்கத்தானே என்று
பேசாதிருந்தேன்
சோறு சமைக்கத்தானே என்று
சோகத்தை மறைத்திருந்தேன்
அகல் விளக்காக்கி அகமகிழ்ந்தாய்
இருள் நீக்கி ஒளியேற்றத்தானே
என்று அமைதியாய் இருந்தேன்
பலப்பல கனிமங்களை உனக்கு
வாரி வழங்கி உன் வாழ்க்கையை
வளமாக்கினேன்.

ஏரிகளையும்நீர் நிலைகளை தூர்த்தும்
வயல்வெளிகளை அழித்தும்
மாட மாளிகைகளையும்,
கூட கோபுரங்களையும் கட்டி
என் மேல் பாரத்தை ஏற்றினாய்.
என்னை அழகாக்கி
நீயும் மகிழ்கிறாய் என்று
பகல் கனவு கண்டிருந்தேன்.


ஆனால்
என் தோல் சுருங்கும் அளவுக்கு,
என் முகம் வாடும் அளவுக்கு
என் மனம் நோகும் அளவுக்கு
என் உடல் நாறும் அளவுக்கு,
குப்பைகூளங்களைப் போட்டு,
நீர் வளங்களை சாக்கடையாக்கி
என்னை நிரந்தர
நோயாளி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!
என் கண்ணீரை வற்றாத
ஜீவநதி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!

அன்னை நான் அழலாமா?
என்னை நீ அழ விடலாமா?

Wednesday, December 31, 2014

புத்தாண்டின் முதல் கவிதை


 இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களுடன் இன்று 
முதல் கவிதை துவக்கம்.  
மேன் மேலும் பதிவுகள் போட உங்கள் அனைவரின் (முக்கியமாக கோபு அண்ணா) வாழ்த்துக்கள் எனக்கு அவசியம் நட்புக்களே.

வாழ்க வளமுடன்.



நாய்க்குட்டி,
ஒட்டகச் சிவிங்கி,
அவளின் மனம் கவர்ந்த
குட்டிக்கரடி, 
பந்து,
இன்னும் பல
பொம்மைகள் இருந்தாலும்
அவள் இலக்கு
என்னமோ
அடுக்களை தான்,
அடுக்களையில் இருக்கும்
அஞ்சரைப் பெட்டிதான்.

கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணில் மண்ணைத் தூவி
கலப்படம் செய்து விட்டாள்

 

பாட்டிக்கு தாளிக்க
ஒவ்வொன்றாய் எடுக்கும்
சிரமம் வேண்டாம் என்றோ?

கண்டிக்க மனம் இல்லாமல்
கண்டிக்க நினைத்தாலும்
இரு கன்னம் குழிய சிரித்து
மயக்கி விடுகிறாள்

என் இரு கன்னத்தில்
முத்தமிட்டு
கோப சுரத்தின்
வேகத்தைக் குறைத்து விடுகிறாள்.

கண்டிப்பதெங்கே
ரசிக்கவே செய்கிறேன்
அவள் செய்யும்
குறும்புகளை






Friday, August 15, 2014

மரங்களை அழிக்காதீர்



முகப் புத்தகத்தில் (FACE BOOK) இந்த புகைப்படத்துக்கு 6 வரியில் ஒரு கவிதை எழுதச் சொல்லி இருந்தார்கள் .  

இதற்கு நான் எழுதிய கவிதைக்கு ஆறுதல் பரிசாக ரூ 50/- கைப்பேசிக்கு RECHARGE  செய்தார்கள். 






என் இனத்தை நீ


வெட்டித்தான் சாய்த்தாலும்


வேரறுத்து வீழ்த்தினாலும்


ஒற்றை மரமாய் நான் நின்றாலும்


நிற்க நிழலை நிச்சயமாய்


தந்திடுவேன்.