Friday, August 15, 2014

இருக்கு / இல்லை






திங்கள் ஒன்று முடிந்தது

திருமணம் இனிதே நடந்து முடிந்து.


காலை எழுந்ததும்

நீ குளித்து விட்டாயா

இருந்தாலும் பரவாயில்லைஎன்று

பின்னே வந்து கட்டிப் பிடித்து

புறங்கழுத்தில் முத்தமிட 

அவள் இல்லை



சமையலறைக்கு வந்து

சொட்டு வத்தல் குழம்பை

உள்ளங்கையில் விட்டு சுவைத்து

சூப்பர்என்று பாராட்டவோ

சிட்டிகை உப்பு சேர் என்று 

ஆலோசனை சொல்லவோ 

அவள் இல்லை.



அன்னைக்குப் பரிந்து

தந்தையை உரிமையுடன்

கண்டிக்கவும் அவள் இல்லை.



அலுவலகத்திலிருந்து நான்

வீடு வந்து சேரும் நேரம்

ஐந்து நிமிடம் கடந்தாலும்

எங்க இருக்க

எப்ப வீட்டுக்கு வருவ?’ என்று 

தொலைபேசியில் கேட்க

அவள் இல்லை.



முகம் பார்த்தே

அம்மா உனக்கு என்ன ஆச்சு?

உடம்பு சரியில்லையா?

என்று அக்கறையுடன்

விசாரிக்க அவள் இல்லை.


 

இன்னும் பட்டியல் இட்டால்

எத்தனையோ இல்லைகள்...............

இத்தனை இல்லைகள்

இருந்தாலும் 

ஒன்று மட்டும்இருக்கு



அது என்ன தெரியுமா?



அவள் வீட்டில்

ஆனந்தனுடன் 

ஆனந்தமாய் இருக்கிறாள்

என்ற எண்ணம் மட்டுமே

எனக்கு ஆனந்தமாய் இருக்கு.

முத்துச் சிதறல்


சூரியனும்,

மேகங்களும்

விளையாடும்

கண்ணாமூச்சி

விளையாட்டைக்

கண்டு களித்து நீ சிந்திய

புன்னகைதான்

முத்துச் சிதறலாய் 

பெய்த இந்த மழையோ?



ஏன் வருண பகவானே

கொஞ்சம் இடி, இடியென்று

வேண்டாம் குறைந்த பட்சம்

கல, கலவென்றாவது

சிரிக்கக்கூடாதா? 



பூமித்தாயின்

தொண்டைக்குழிகூட

நனையவில்லையாமே!

கொசுவின் புலம்பல்






நீ தேக்கிய தண்ணீரிலேயே
நான் உருவானேன்.

இறக்கைகள் 
வளர்ந்து,
பறக்கும் போது மட்டும்

மட்டை, வத்திகளைக் கொண்டு
என் உயிரை வாங்குகிறாயே

இது என்ன நியாயம்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.










Wednesday, August 13, 2014

தோழிகள் இணைந்தனர்.


இன்று திடீரென்று என்னுடன் www.arusuvai.com ல் இணைந்திருந்த தோழி திருமதி மாலதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கும் திருமதி அனுராதா (இவர் என்னுடன் ஒன்றாக பணி புரிந்தவரும் கூட) தன்னுடன் படித்தவர் போல் இருப்பதாகவும், முடிந்தால் விசாரித்து சொல்ல முடியுமா என்றும் கேட்டார்.  அவர் சொன்ன அடையாளங்களை சொல்லி விசாரித்தால் சாட்சாத் நான் மாலதியுடன் பள்ளியில் படித்த அதே அனுராதாதான் என்றார். மாலதியின் தொலைபேசி எண்களை அனுராதாவிற்கும், அனுராதாவின் தொலைபேசி எண்ணை மாலதிக்கும்  SMS  செய்து விட்டேன்.  கிட்டத்தட்ட 30, 35 ஆண்டுகளுக்குப் பிறகு இரு தோழிகள் இணைவதற்கு நான் ஒரு கருவியாக இருந்ததற்கு மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க நட்பு!.


Thursday, August 7, 2014

தேர் நிலைக்கு வந்தாச்சு – பகுதி 1.



ஆமாங்க. ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் இந்தத் தேர் (அட என்னைதாங்க சொல்லறேன்) வேலை என்னும் சாலைகளில் ஓடி 31.05.2014 சனிக்கிழமை திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில்  மாலை 0530 மணிக்கு நிலைக்கு வந்துடுத்து.  ஆமாங்க அன்றுதான் பணி ஓய்வு பெற்றேன்.  அதாவது, அலுவலகப் பணியிலிருந்து மட்டும்.  மத்தபடி நம்பள சமையலறை, இட்லி, தோசை, மாவு, கிரைண்டர் இத்யாதி, இத்யாதி எல்லாம் விடவே விடாதே.  இப்ப ஆற, அமர சமைத்து, ஆத்துக்காரருக்கு பக்கத்துல இருந்து சாப்பாடு போட்டு, பழங்கதை, புதுக்கதை பேசி, சரி, அதுக்கெல்லாம் கடைசியா வருவோம்.
 
கொஞ்சம் திரும்பிப் பார்த்தா எனக்கே பிரமிப்பா இருக்கு.  இவ்வளவு வருஷங்களா உழைச்சிருக்கேன்.  அம்மாடி.  ஆனா வேலைக்குப் போறது எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க.  பல அலுவலகங்கள், பலவித மனிதர்கள், பலப்பல அனுபவங்கள், மனதுக்கு நிறைவான சம்பவங்கள். எல்லாத்தையும் பத்தி கொஞ்சம் விவரமாவே சொல்றேனே.
 
அடையார் டாக்டர் தர்மாம்பாள் பாலிடெக்னிக்கில் (இப்பதான் இந்த பேரு.  நாங்க படிக்கும்போது GOVERNMENT POLYTECHNIC FOR WOMEN) DIPLOMA IN COMMERCIAL PRACTICE 3 வருடப் படிப்பு SHORTHAND HIGHER, TYPEWRITING HIGHER, ACCOUNTANCY HIGHER, மற்றும் COMMERCE SUBJECTS களும் சேர்த்து பாஸ் செய்துவிட்டு வெளியே வந்ததும் எதிர்காலமே ஜகஜ்ஜோதியாக தெரிந்தது.  அந்தக் காலத்துல முக்கால்வாசி பேருக்கும் குலத்தொழிலே TYPEWRITING SHORTHAND தானே.  FINAL YEAR EXAM எழுதின உடனேயே ENGLISH ELECTRIC COMPANYல் வேலை கிடைத்தது.  மிகவும் குறைந்த நாளே அங்கே வேலை செய்துவிட்டு, EMPLOYMENT EXCHANGE ல் பதிவு செய்த உடனேயே (அதெல்லாம் அந்தக் காலம்ன்னு நீங்க புலம்பறது என் காதுல விழுதுங்க)
மாநில அரசாங்கத்துல வேலை கிடைத்தது.  அங்க ஒரு 10 மாதங்கள் வேலை செய்தேன். அதுக்கப்புறம் 22.08.1974 DEPARTMENT OF TELECOMMUNICATIONல STENOGRAPHERஆ JOIN பண்ணினேன். ஆகஸ்ட் 1974ல  இருந்து 31.05.2014 வரை DOT, BSNL இரண்டிலும் மோத்தம் 39 ஆண்டுகள் 9 மாதங்கள் பணி செய்து, நிறைவான பணி செய்து பணி ஓய்வு பெற்று விட்டேன்.  ஆக மொத்தம் கிட்டத்தட்ட 41 ஆண்டுகள், கூட்டிக் கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வந்துடுத்தா?







Saturday, August 2, 2014

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.



நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.