Monday, July 4, 2016
Saturday, May 28, 2016
என் இனிய இலங்கைப் பயணம் பகுதி 1
எனது பிறந்த நாளான இன்று (29.05.2016) ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறேன்.
என்ன செய்ய.
குடும்பத் தலைவின்னா சும்மாவா?
சரி இனி நிறைய எழுதணும்ன்னு வாழ்த்துங்கள்.
முதல் வெளிநாட்டுப் பயணம்
சிலருக்கு வெளிநாட்டுப்
பயணம் என்பது மாம்பலத்தில் இருந்து 5B பேருந்தைப் பிடித்து திருமயிலை செல்வது போல்
இருக்கலாம். ஆனால் எங்களைப்போல் வெளிநாட்டுப்
பயணம் வாய்க்குமா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு………… ரொம்பவும்
ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கத்தானே செய்யும். (PASSPORTஏ இப்பதானே எடுத்தோம்). கடல்கடந்து ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் அந்தமானுக்கு. அதுவும் நம் நாட்டைச் சேர்ந்ததுதானே. 5 நாட்கள் இலங்கைப் பயணம் ஒன்று ஏற்பாடு செய்தோம். ரொம்பவும் ஆர்வமாக காத்திருந்த நாள் வந்தது,
(இதுக்கே இப்படீன்னா….)
மே மாதம் 3ம் தேதி
காலை 10 மணி விமானத்தில் நானும் என் கணவரும் புறப்படத் தயாராகி விட்டோம். 10 மணி
விமானத்திற்கு காலை 7 மணிக்கே கிளம்பி விட்டோம். மகன் விமான நிலைத்தில் கொண்டு விட்டு
விட்டுச் சென்றான்.CHECK IN முடிந்து EMIGRATION க்கு சென்றோம். CHECK IN க்யூவில் நிற்கும் போதே என் கணவர், ’பாரு,
நீ வெச்சிருக்கற இட்லி பொட்டலம், தண்ணி பாட்டில் எல்லாம் குப்பைத் தொட்டிக்குதான் போகப்
போறது. இதெல்லாம் வேண்டாம்ன்னா கேக்கறயா, தண்ணியையாவது
குடிச்சு காலி பண்ணு’. என்றார். நான் பதிலே சொல்லலை. IMIGRATION முடிந்து இட்லி சகிதமாக இடம் தேடி உட்கார்ந்து
காலை சிற்றுண்டியை 9 மணிக்கு முடித்துக் கொண்டோம்.
நாங்கள் பயணித்த விமானம்
ம்ம்ம். விமானத்தில்
ஏறியாச்சு. அழகான புடவைக்கட்டுடன் விமானப்
பணிப் பெண்கள். ’AYU BOWAN’ (LONG LIVE என்று அர்த்தமாம்) வரவேற்றார்கள்.
நம்ப மதுரைப் பக்கம்
எல்லாம் பின் கொசுவம் வைத்துக் கட்டுவார்களே, கொஞ்சம் அதுக்கு தங்கச்சி மாதிரி ஒரு
கட்டு. எனக்கு ரொம்பப் பிடித்தது. மீண்டும் ஒரு முறை இலங்கைக்குச் செல்ல வாய்ப்பு
கிடைத்தால் (ஆசையைப் பார்ரா) கண்டிப்பாக அவர்கள் மாதிரி புடைவை கட்டிக்கொண்டு ஒரு புகைப்படம்
எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறை வாய்ப்பை
தவற விட்டு விட்டேன்.
சிறுவர், சிறுமியருக்கு வரை புத்தகமும் வண்ண பென்சில்களும் அடங்கிய ஒரு உரையை கொடுத்தார் விமானப் பணிப்பெண்.
அட இந்த சிறுமி அதை வாங்கி அழகாக வைக்கிறாள் பாருங்கள்.
மிகவும் சிறிய
குழந்தைகளுக்கு SOFT TOYS கொடுப்பார்களாம்.
(எல்லா அயல் நாடு செல்லும் விமானங்களிலும் இப்படி கொடுப்பார்களாமே– இப்ப தானே
நமக்கு தெரியறது).
எங்களுக்கும் குடுத்தாங்க. அதை ஏன் கேக்கறீங்க. பொங்கல் மாதிரி, அரிசியும், முழுப்பயறும் போட்டு
வேக வைத்து தட்டில் கொட்டி பெரிய வில்லைகளாக. நீங்க
எதிர்பார்க்கற மாதிரி இல்லீங்க. மிளகு, சீரகம்,
முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை இதெல்லாம் மருந்துக்குக் கூட இல்ல. அதான் சொன்னேனே பொங்கல் மாதிரின்னு. ம்ம்ம்ம். அதுக்கு தொட்டுக்கு அது அதை விட அருமை. வெங்காயம், புளி, உப்பு அவ்வளவுதான். (வெந்ததுதான் பச்சையாக இல்லை). அப்புறம், ஒரு கப்பில் யோகர்ட் – அதான் தயிரில் சர்க்கரை போட்டு, அப்புறம், காபி அல்லது டீ, ஒரு கப்பில் சர்க்கரை, பால் பொடி, போட்டுக்கொண்டால்
அவர்கள் காபி அல்லது டீ டிகாக்க்ஷனை சுடச்சுட ஊற்றுகிறார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு
அந்த பொங்கல் மாதிரியை முழுங்கி வெச்சேன்.
தொட்டுக்க வைத்ததை தொடவே இல்லை. கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பாத்தா நம்பாளு
(அதான் என்ற ஊட்டுக்காரர்) சாப்பிட்டு முடிச்சுட்டார். ஏங்க வீட்டுல உப்பு கம்மி, காரம் கம்மி, 33 வருஷமா என்ன சமைக்கிறன்னு அப்பப்ப நக்கீரரா இருக்கறவரு
இங்க பாத்தா கப்பு சிப்பு. ம் தட்டு காலி.
நான் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பு, நம்ப அருமை தெரியறதுக்காகவே இவங்கள வெளியில இந்த
மாதிரி அடிக்கடி கூட்டிக்கிட்டுப் போகணும்.
ஒன்றரை மணி நேர
பயணம் என்றார்கள். ஒரு மணி நேரத்திலேயே கொழும்பு
விமான நிலையம் சென்று அடைந்து விட்டது விமானம்.
வெளியே வந்து EMIGRATION வரிசைக்கு சென்ற போது, எங்களைப் பார்த்த
உடனே இந்திய PASSPORT இருந்தால் FORM வேண்டாம்.
PASSPORT மட்டும் காண்பித்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள். பார்ரா நம்ப PASSPORTக்கு இருக்கற மரியாதையை என்று
பெருமிதப்பட்டுக் கொண்டேன்.
உள்ளுக்குள் கொஞ்சம்
பயம், ஒருவேளை நம்மை அழைத்துச் செல்ல யாரும் வராவிட்டால். மகனிடம் கிளம்பும் போதே சொல்லி வைத்திருந்தேன். MEETING அது இது என்று பார்க்கவில்லை என்று சொல்லக்கூடாது. 1130 மணியிலிருந்து WHATSAPP ஐயே பார்த்துக் கொண்டிரு
என்று. அவன் எல்லாம் கண்டிப்பா வருவா போம்மா என்று சிரித்துக்
கொண்டே சொன்னான். வெளியில் வந்ததும் PLACARD வைத்துக் கொண்டிருப்பவர்களை
பார்த்துக் கொண்டே வந்தோம். நல்லவேளை என்னவரின்
பெயர் கொண்ட பதாகையைப் பார்த்ததும் அப்பாடா என்றாயிற்று. (பதாகை – பார்த்தீங்களா, இலங்கைக்குள் காலடி வைத்ததும்
என்ன மாதிரி தூய தமிழ் வருது பாருங்க. ஆமாம். அவங்க தமிழ் என்ன ஒரு அழகு).
திரு மாலிக், ஓட்டுனர்
மகிழுந்துடன் எங்களுக்காகக் காத்திருந்தார்.
வெளியே வந்து மகிழுந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த விமானப் பணிப்பெண்கள்.
என்னவர்
BANK OF CEYLON ல் டாலர்களைக் கொடுத்து இலங்கைப் பணமாக மாற்றிக் கொண்டு மகிழுந்தில்
ஏறி அமர்ந்தோம்.
தொடரும்..............
Monday, November 9, 2015
பிறந்த வீட்டு சீதனம் – பகுதி 1.
கோபு அண்ணாவிடமிருந்து
சீதனம் பெறுவது எனக்கொன்றும் புதிதல்ல. என்
பிறந்த நாளுக்கு, எங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கு, ஏன் போனசாக என் மகள் கல்யாணத்திற்கு,
என் பேத்தியின் பிறந்த நாளுக்கு என்று பலமுறை பெற்றிருக்கிறேன்.
ஆனால் இந்த முறை
சற்று வித்தியாசமான சீதனம். தீபாவளிக்கு பிறந்தவீட்டு சீதனம்.
இந்த ரூபாய் நோட்டுக்கள
எப்படி எடுக்கணும்ன்னு எனக்கு அனுப்பின மின்னஞ்சல்ல சொல்லி இருந்தார் கோபு அண்ணா. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இதை பிரிக்கவே போறதில்லை. என் கைக்கு எப்படி வந்து சேர்ந்ததோ அப்படியே வைத்திருப்பேன்.
சிறுகதை விமர்சனப்
போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறும் வாய்ப்பை கோட்டைவிட்ட எனக்கு (அலுவலக வேலை,
வீட்டு வேலை, பெண்ணின் கல்யாணம், பேத்தியின் ஆக்கிரமிப்பு – பேத்திதான் எங்கள் நேரம்,
மனது எல்லாவற்றையும் மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டாளே) ஆறுதலாக இந்த சுலபமான
பின்னூட்டப் போட்டி.
ஆனால் ஒன்று. இந்தப்
போட்டி அறிவிப்பிற்கு முன்பே நான் கோபு அண்ணாவிடம், “நீங்கள் என் வலைத்தளத்திற்கு வருகை
தந்து ஒவ்வொரு பதிவுக்கும் (ஆமாம் மொத்தப்பதிவுகளே தம்மாத்தூண்டுதான்) பின்னூட்டம்
கொடுத்துள்ளது போல் நானும் உங்கள் வலைத் தளத்திற்கு வந்து எல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ (கொஞ்சமா,
நஞ்சமா, அம்மாஆஆஆஆடி எழுநூத்தி ஐம்பது) பதிவுகளுக்கும் கண்டிப்பா பின்னூட்டம் கொடுத்துடறேன்’னு
உதார் விட்டேன். ஆனா இதை முடிக்க நான் பட்ட பாடு. எப்படியோ
உருண்டு, பெரண்டு முடிச்சுட்டேன்.
சக பதிவர்களை கௌரவிப்பதிலும்,
ஊக்குவிப்பதிலும் கோபு அண்ணாவிற்கு இணை அவரே தான். அப்படிப்பட்ட கோபு அண்ணாவிடமிருந்து இந்தப் பரிசு
பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆமாம். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டுப்படணும்
இல்லையா?
சாதனையாளர் விருது
இதைப் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது.
750 பதிவுகள், பலப்பல பரிசுகள் இவர் பெற்றதும் இல்லாம விமர்சகர்களுக்கும் தாராளமா வழங்கி,
ஆனா இவர் வலைத் தளத்துல
”சாதாரணமானவன்
தான் ஆனால் ஏதாவது சாதிக்க
வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்”
அப்படீன்னு போட்டுப்பாராம்.
ஆனால் எனக்கு சாதனையாளர்
விருதுன்னு போடுவாராம்.
சிரிப்புத்தான்
வருகுதைய்யா
பாருங்க. என் வலைத் தளத்தின் முகவரிகளை அழகா கொடுத்திருக்கார். இதை கண்டிப்பா இவர் வலைத் தளத்தில் போடுவார். அதற்கு பின்னூட்டங்களோ நூத்துக் கணக்குல வரும். இதுல கொஞ்சம் பேராவது என் வலைத் தளம் பக்கம் வந்து
எட்டிப் பார்ப்பாங்க. இது தீவாளி போனசு.
...............தொடரும்
Tuesday, October 27, 2015
இவள் இல்லாமல்
நான் இல்லை.
இவள்தான் என் இனிய
தோழி கருப்பழகி. இவள் வயது ஏழரை.
இவள் என்னுடன்
இணைந்தது ஜனவரி 2008ல். இவள் பெயர் ஆனந்தா. வருடங்கள் ஏழரை ஆனாலும் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்
அப்படியே இருக்கிறாள். அழகாக இருக்கிறாள். அவளுக்கு இட்ட வேலைகளை அருமையாக செய்கிறாள். இவளுக்கு அப்புறம் என்னை வந்து இணைந்தவர்கள் கூட (அதான்
‘மனைவியை நேசிக்கறவங்க எப்படி வேண்டாம்ன்னு சொல்லுவாங்க’ன்னு விளம்பரப்படுத்துவாங்களே
அவளே தான்) சொதப்பறபோது இவள் மட்டும் எப்பொழுதும் கை கொடுக்கும் கையாகவே இருக்கிறாள்.
அப்படி என்ன அருமையான
வேலைகள் என்று கேட்கிறீர்களா?
சாம்பாருக்குத் தேவையான பருப்பு
வேக வைக்க, விதம், விதமான கூட்டுகள் செய்ய,
சாம்பார், ரசம், பொங்கல்,
உப்புமா, சூப், பாயசம், நவராத்திரிக்கு தினம், தினம்
சுண்டலுக்கு தானியங்கள் வேக வைக்க,
ஆடிக்கூழ் தயாரிக்க, ஏன் வெண்ணை காய்ச்சக் கூட
– இப்படி எந்த வேலை கொடுத்தாலும் மிக மிக அருமையாக, கன கச்சிதமாக செய்து முடித்துவிடுவாள்.
இவள் ஒரு நாளில்
குறைந்தது மூன்று முதல் நான்கு முறையாவது என்னுடன் இணைந்து வேலை செய்கிறாள். இதுநாள் வரை ஒரு நாளும் இவள் வேலை நிறுத்தம் செய்ததே
இல்லை. சொதப்பியதும் இல்லை.
நம்பினால், நம்புங்கள்
இவளுக்கான ரப்பர் வளையம் (GASKET) இது வரை மொத்தம் மூன்றே மூன்றுதான் உபயோகித்திருக்கிறேன்
இந்த ஏழரை வருடங்களில். அதிலும் ஒன்று என்
அஜாக்கிரதையால் பிய்ந்து போயிற்று.
ஆனால் இவளுக்குப்
பின் வந்த மற்றவர்களுக்காக நான் மாற்றிய ரப்பர் வளையங்களின் எண்ணிக்கை கணக்கே இல்லை.
இப்ப புரிந்ததா
இவளை ஏன் என் இனிய தோழி என்று சொன்னேன் என்று.
Sunday, June 21, 2015
60 முடிந்தது அருமையாக.
நன்றி என்று ஒற்றைச்
சொல்லாக சொல்லி முடிக்க முடியாது. முகப் புத்தகத்திலும்,
கைப்பேசி செய்தியிலும், தொலை பேசியிலும் என் அறுபதாவது பிறந்த நாளுக்கு (29.05.2015) வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்
மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றி.
என்னுடைய 60வது
பிறந்த நாளுக்கு என் கணவரின் அன்புப் பரிசு.
என் மகன், மகள்,
மருமகள், மருமகன், லயாக்குட்டி எல்லாரும் சேர்ந்து பரிசளித்த தங்க மோதிரம்
என் அம்மா கொடுத்த
500 ரூபாய்க்கு (கண்டிப்பாக ஏதாவது வாங்கிக் கொள் என்ற அன்புக் கட்டளைக்கேற்ப) நான்
வாங்கிக்கொண்ட இரண்டு பருத்திப் புடவைகள்.
பக்கத்து வீட்டு
உமா (நான் மிகவும் மதிக்கும், நேசிக்கும் பெண்மணி) அளித்த அன்புப் பரிசு.
மாமியார் கொடுத்த
100 ரூபாயை அப்படியே வைத்திருக்கிறேன்.
இது எல்லாவற்றையும்
விட எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லாத ஒரு பரிசு எங்கள் பேத்தி லயாக்குட்டியின் அன்பு
முத்தங்கள். நான் அவளிடம் எனக்குக் கிடைத்த
பிறந்த நாள் பரிசிலேயே மிகச் சிறந்தது அவளின் முத்தங்கள் தான் என்று சொன்னேன். அன்று
முழுவதும் அவள் ஐந்து நிமிடங்களுக்கொரு முறை ‘பாட்டி, உனக்கு எது BEST GIFT’ என்று கேட்டாள். ‘உன் முத்தங்கள்தான்’ என்று சொன்னதும் ரசித்து,
ரசித்து சிரித்தாள்.
இதை விட என்ன பெரியதொரு
பரிசு இருக்கப் போகிறது.
GOD IS SO GREAT
60 முடிந்து
61ல் மகிழ்ச்சியாகக் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் உங்கள் அன்பான வாழ்த்துக்களுடன்.
Subscribe to:
Posts (Atom)



















