இன்று நம்ம சென்னைக்கு 375 பிறந்தநாள்..!
நான் பிறந்தது முதல் இன்று வரை வளமாக, நலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்காரச் சென்னை மாநகரருக்கு இன்று பிறந்த நாள். நீங்களும் வாழ்த்துங்களேன்.
*
***
*****
***
*
தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம், ஆரம்ப காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து இருந்தது. சென்னை கடற்கரை பகுதியை ஒட்டியிருந்த இந்த கிராமங்கள் ‘சென்னப் பட்டிணம்’ என்று அழைக்கப்பட்டது.
1639-ம் ஆண்டு இங்கு வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், இந்தப் பகுதியை ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பு அமைக்க தேர்வு செய்து விலைக்கு வாங்கினார்கள். ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி இந்த நிகழ்வு நடந்ததால், அன்றைய தினமே சென்னையின் முதல் பிறந்த நாளாக கருதப்படுகிறது.
அதன் பிறகு ஓராண்டு கழித்து, இன்றைய தலைமைச் செயலகம் இயங்கிக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டையை மையப்படுத்தி ஆங்கிலேயர்களின் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன. இதனால், ஆங்காங்கே பிரிந்து கிடந்த கிராமங்கள் ஒன்றிணைந்து நகரமாக உருவெடுக்க தொடங்கியது.
1688-ம் ஆண்டு சென்னை முதல் நகர சபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்தியாவிலேயே முதல் நகர சபை என்ற பெருமை சென்னைக்கு கிடைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் வசம் இருந்த புனித ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே மீண்டும் ஆங்கிலேயர் வசம் சென்றது.
அதன்பின்னர், நகர சபையாக இருந்த சென்னை வளர்ச்சியடைய தொடங்கியது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் ரெயில் பாதைகள் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. சென்னப் பட்டிணம் என்ற பெயர், அதன்பின்னர் மதராஸ் பட்டிணம், மதராஸ் மாகாணம் என்று பெயர் மாறியது.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக சென்னை விளங்கியது. 1956-ம் ஆண்டு மொழி வாரியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகரமானது. அதன்பின்னர், 1996-ம் ஆண்டு மதராஸ், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.
அன்று முதல் அனைத்து தரப்பு மொழிகள் பேசும் மக்கள் வசிக்கும் ‘காஸ்மோபாலிடன்’ நகரமாக சென்னை விளங்கிவருகிறது. ஆரம்ப காலத்தில் 30 ஆயிரம் மக்கள்தொகையை கொண்டிருந்த சென்னையில் இன்று ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.
சாப்ட்வேர் நிறுவனங்கள், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், கெமிக்கல் நிறுவனங்கள் உள்ளிட்டவை சென்னையில் அதிகம் இருப்பதால், வேலைவாய்ப்புகளை நம்பி இங்கு அதிகம் பேர் தங்கியுள்ளனர். அவர்களை நம்பி வியாபாரிகளும் கடைகளை விரித்துள்ளனர்.
பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி வரும் சென்னை மாநகரம் தனது 375-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. அதையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் வளர்ந்த நகரங்களுள் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்கினாலும், சுகாதாரமற்ற நீர்நிலைகள், மாசுபடிந்த காற்று என்று வாழத் தகுதியற்ற நகரமாக மாறத் தொடங்கியுள்ளது வேதனைக்குரியது. தெளிந்த நீரோடையாக இருந்த கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்றவை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கழிவுநீர் ஓடையாகவே மாறிவிட்டது.
இந்த ஆறுகளை சீரமைக்க, காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்தே திட்டங்கள் தீட்டப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டாலும், இன்னும் சீரமைந்தபாடில்லை. தற்போது, கூவம் நதியை சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக, பணிகளை மேற்கொண்டால் அடுத்த சில ஆண்டுகளில் கூவம் நதியிலும் தெளிந்த நீர் ஓடுவதை மக்கள் கண்டு ரசிக்கலாம். அதை, வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு பிறந்தநாள் பரிசாகவும் நாம் அளிக்கலாம். ஆனால், இதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த கனவு நனவாகும்..............
நன்றி:மாலை மலர் நாளிதழ்
சென்னைக்கும் சென்னையில் உள்ள அனைவருக்கும் [உங்களுக்கும் சேர்த்துதான்] என் அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete